களின் நிலைமை இதற்கு நேர்மாறாகும், ஊராரின் பழிச் சொல்லை முதலில் கேட்டபோது உள்ளம் நடுங்கி அஞ்சிய போதிலும், காதலைக் குற்றம் என்று உணராத காரணத்தால் நாளடைவில் அந்த அச்சம் குறைந்துவிடுகிறது. பிறகு அந்த அலரைக் கேட்கும்போதெல்லாம், காதல் வளர்கின்றது; மேன் மேலும் பெருகுகின்றது. ஊரார் இவ்வாறு அலர் தூற்றி அவர்களின் காதலுக்கு இடையூறு செய்து அடக்க முடியும் என்று எண்ணுவார்களானால், அது வீண் முயற்சியே; அந்த அலரைக் கேட்டு, காதலியின் தாய், தன் மகளை வீட்டில் கட்டுப்படுத்திக் கடிந்து கூறுவாளானால், அதுவும் வீண் முயற்சியே, திருவள்ளுவரின் கற்பனையில் அமைந்த காதலி பின்வருமாறு கூறுகிறாள்:- "ஊராரின்அலர் இதற்கு எருவாகவும், அன்னையின் கடுஞ்சொல் இதற்கு நீராகவும் பயன்பட்டு, இந்தக் காதல் நோய் செழித்து வளர்கிறது. அலர் தூற்றுவதால் காதலை அடக்கிவிடுவோம் என்று சிலர்கருதுதல், நெய்யால் நெருப்பை அவித்து விடுவோம் என்று எண்ணுவதைப் போன்றதுதான்!" ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய், (குறள், 1147) நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் (குறள், 1148) இந்தக் கருத்து நம்மாழ்வார் என்னும் சான்றோரின் உள்ளத்திலும் பதிந்து நின்றது. காதல்வாய்பாட்டால் கடவுளன்பைப் பாடிய அவர், "ஊரவர் கௌவை" என்ற திருக்குறளைத் தம் பாட்டில் அவ்வாறே அமைத்துள்ளார்:- |