ஊரவர் கௌவை எருவிட்டு அன்னைசொல் நீர்மடுத்து ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள் பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனி நங்கண்ணன் தோழி கடியனே. (திருவாய்மொழி) குற்றம் செய்கின்ற மற்றவர்கள் -- பொய்யர் திருடர் முதலானவர்கள் - பழிச்சொல்லுக்கு அஞ்சி அடங்கும்போது, காதலர்களின் உள்ளம் மட்டும் பழிச்சொல்லை எருவாகக் கொண்டு செழிப்பதற்கும், நெய்யாகக் கொண்டு கொழுந்து விட்டு எரிவதற்கும் காரணம் என்ன? பொய், திருடு முதலியவை உண்மையான குற்றங்கள்; மனிதர் இயற்கை நெறியிலிருந்து விலகிச் செயற்கையாகப் பழகுபவை; எந்தக்காலத்திலும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. ஆனால் காதல், அப்படிப்பட்டது அன்று. அது உண்மையில் குற்றம் அன்று; மனிதர்க்கு இயற்கையாக அமைவது; சமுதாயம் அதற்கு விதிக்கும் கட்டுப்பாடே. செயற்கையானது; சமுதாயம் அதை முதலில் எதிர்ப்பினும் பிறகு காலப்போக்கில் குற்றமாகக் கருதாமல் ஏற்றுக் கொள்கிறது. தவிர, பொய், திருடு முதலியவை பொருள் தேடும் முயற்சியை ஒட்டியவை; வயிற்றை ஒட்டியவை. ஆனால், காதல் உயிர்வாழ்வின் அடிப்படையானது. அதனால்தான், ஊராரின் பழிச்சொல்லுக்கு அஞ்சும் அச்சத்தையும் கடந்து, இந்தக் காதலுணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. நாளடைவில் அந்தப் பழிச்சொல்லையும் எருவாகவும் நெய்யாகவும் ஏற்று அவற்றால்செழிப்பும் வளர்ச்சியும் பெறுகிறது. அலரைக் காதல்பயிர்க்கு எரு என்றும், காதல் நெருப்புக்கு நெய் என்றும் அவள் கருதுகிறாள். |