பக்கம் எண் :

5. மனத்தின் மாறுதல்29

அவன் எவ்வாறு கருதுகிறான்? அவனுடைய உள்ளத்தில் இயல்பாக
உள்ள அஞ்சாமை பெருந்துணையாக உள்ளது. ஒரு குற்றமும்
செய்யாதவனாக உரிமையுடன் காதல் துணை தேடுகின்றவனாக
இருத்தலால், அலர் தூற்றுவதைக் கேட்டு அவன் வருந்தவில்லை.
அந்த அலரே தன் காதலுக்கு நற்சான்று போல் உணர்கின்றான்.
காதலுறவு அதனால் வளர்ச்சி பெற்றதாக உணர்கிறான், "அலரால் எம்
காதல் வளர்ச்சி உடையதாகின்றது. அது இல்லையானால் தன் தன்மை
இழந்து சுருங்கிவிடும்" என்கிறான்.

கவ்வையால் கவ்விது
காமம் அதுஇன்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து (குறள், 1144)

அலர் தூற்றுவதில் முனைந்துள்ள ஊரார், காதலுக்குத் தீமை செய்ய
முயல்வதாகஎண்ணுகிறார்கள். ஆனால் அது நேர்மாறாக
விளைகின்றது என்கிறான் காதலன். தன் காதலியைக் காணமுடியாமல்
இடர்பட்டு வருந்தும் நிலையில் உள்ள போது, பிரிவுத் துன்பத்தால்
உயிர் இழப்பது போல் வருந்தும் அவனுக்கு, இந்த ஊராரின் அலர்,
உயிரைக்காப்பது போல் உள்ளதாம். ஊரார் இந்த உண்மையை
அறியவில்லை, அதனால்தான் அலர் தூற்றுகிறார்கள். அலரால்
காதலர்க்கு நன்மையே ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவர்கள்
அவ்வாறு தூற்றுவதைக் கைவிடுவார்கள். அந்த உண்மை
அவர்களுக்குத் தெரியாது, அது காதலரின் நல்ல பேறு (பாக்கியம்)
தான்.

அலர்எழ ஆருயிர்
நிற்கும்; அதனைப்

பலர்அறியார் பாக்கியத் தால் (குறள், 1141)