பக்கம் எண் :

38குறள் காட்டும் காதலர்

பெற்றுவிட்டார் என்றால், அப்படிப்பட்டவரின் நெஞ்சில் அன்பு
ஏது? போய் விரைவில் திரும்பிவிடுவதாகக் கூறினாலும் அவரை
எப்படி நம்புவது? சொல்லத் துணியும் அளவிற்குக் கல் நெஞ்சம்
உடையவர் திரும்பி வந்து அன்பு செலுத்துவார் என்று
ஆசைப்படுவதும் வீண்தான்" என்கிறாள்.

பிரிவுஉரைக்கும் வன்கண்ண
ராயின் அரிதுஅவர்

நல்குவர் என்னும் நசை. (குறள், 1156)

அவனும் எப்படியோ துணிந்து வந்து அவளிடம் சொல்கிறான்,
"நான் போய் விரைவில் திரும்பி விடுவேன்" என்கிறான்.

துயரம் மிக்க நெஞ்சம், துணிந்து மறுக்கும் நெஞ்சம் இரண்டும்
கலந்த உணர்வுடன் அவள் மறுமொழி கூறுகிறாள். "திரும்பி
வருவதைப் பற்றி என்னிடம் சொல்வது இருக்கட்டும். போகாமல்
இருப்பது உண்டானால் சொல்லுக. விரைவில் திரும்பி வருதல் பற்றிய
பேச்சை, அதுவரையில் உயிர்வாழ வல்லவர்கள் யாராவது இருந்தால்
அவரிடம் சொல்லிவிட்டுச் செல்க" என்கிறாள்.

செல்லாமை உண்டேல்
எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை. (குறள், 1151)

பிரிவு என்றதும் பழங்காலக் காதலிக்குத் தன் மரணமே நினைவுக்கு
வந்தது, "திரும்பி வரும்வரையில் யான் உயிர் வாழமாட்டேன். இது
உறுதி. ஆகையால், யான் வாழ வேண்டுமானால், செல்லாதிருக்க
வேண்டும்" என்ற கருத்தை வாய்விட்டுக் கூறமுடியாத துயரத்தை
அடக்கிய காரணத்தால்தான், "திரும்பி வருதலைப் பற்றி என்னிடம்
சொல்லாதே" என்றாள். காதலன் பிரிவு என்பதைத் தன் மரணம்
போன்றதாகவே உணர்ந்த உணர்வுதான் அதற்குக் காரணம்.