7. உயிரின் சுமை சில உணர்ச்சிகள் அடக்க அடக்க மிகும். துயரம் இத்தகைய உணர்ச்சி, யாரேனும் வந்து ஆறுதல் சொல்லச் சொல்ல. துயரம் பொங்கி எழும். அடியோடு மறந்தால் அல்லாமல் துயர உணர்ச்சியை அடக்கி மறைக்க முடியாது. காதலர் ஒருவரை ஒருவர் பிரிந்து வருந்தும் துன்பமும் இத்தகையதே ஆகும். காதலரின் உள்ளத்தே மறப்பு என்பது காதலைப் பொறுத்தவரையில் இல்லை. ஆகையால் பிரிந்த காதலனை மறந்து, துயரத்தை மாற்றிக் கொள்ள வழி இல்லை. மறக்க முடியாதது காதல்; ஆனால் ஓரளவு மறைக்க முடியும். காதலி தன் உள்ளத் துயரத்தை மறைக்க முயல்கிறாள். அந்த முயற்சியிலாவது வெற்றி பெறுகிறாளா? அதுவும் இல்லை. தன் காதலைப் பிறர் அறியக்கூடாது என்று மிகப்பொறுப்பாக நடந்துகொள்கிறாள். காதலன் பிரிந்த போது உள்ளத்தில் ஏற்பட்ட கலக்கத்தை யாரும் அறியக்கூடாது என்று தனக்குள் அடக்கிக்கொள்கிறாள். அதனால் பயன் ஏற்படவில்லை. கலக்கம் துயரமாக வளர்கிறது. தோழியரிடமும் தாயாரிடமும் பக்கத்திலுள்ளவரிடமும் பழையபடியே பழக முயல்கிறாள். காதலைப் பற்றி ஒன்றும் அறியாதவள்போல் சில பேச்சும் பேசுகிறாள். ஆனால் அவளுடைய உள்ளத்தின் |