பக்கம் எண் :

40குறள் காட்டும் காதலர்

துயர உணர்ச்சி இந்த நடிப்பிலும் பேச்சிலும் எவ்வாறோ
புலப்படுகிறது. காதல் துன்பத்தைப் பிறர் அறியாதபடி மறைக்க
மறைக்க, அது முன்னிலும் சில மடங்கு வளர்ந்து பெருகுகிறது.

தனியே செல்கிறாள். தன் முயற்சி எல்லாம் பயனற்றுப் போகும்
இந்தப் புதிய அனுபவத்தை எண்ணிப் பார்க்கிறாள். கிணற்றில் உள்ள
ஊற்றுநீர் அவளுடைய நினைவுக்கு வருகிறது. நீரை இறைக்கிறார்கள்;
இறைக்க இறைக்க, ஊற்றுப் பெருகுகிறது. நீரைக் குறைக்க முயலும்
முயற்சி, நீரைப் பெருக்கும் முயற்சியாய் முடிகிறது. "என் காதல்
துன்பமும் இப்படிப்பட்டதாகவே உள்ளது. அதைப் பிறர் அறியாமல்
மறைக்க மறைக்க, அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இறைக்க
இறைக்கப் பெருகும் நீர், போன்றது தான் இது" என்கிறாள்.

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர்போல மிகும். (குறள் , 1161)

இவ்வாறு மறைக்க முடியாத காதல் நோயை வேறு என்ன செய்வது?
மறைத்து அடக்க முடியாததை வெளிப்படச் சொல்வது என்றாலும்,
யாரிடம் சொல்வது? தாயாரிடம் சொல்லவோ அச்சம்; தோழியரிடம்
சொல்லவோ தயக்கம்; இந்த நிலையில் துணிந்து அவர்களிடம்
சொல்லிவிடலாம் என்றாலோ, சொல்வதில் ஒரு பயனும் இல்லை.
சொல்வதானால் காதலனிடம் சொல்ல வேண்டும். அவனிடம்
சொல்லவோ நாணுகிறாள். "இந்த நோயை என்னால் மறைக்கவும்
முடியவில்லை. இதற்குக் காரணமான காதலரிடமே சொல்லி விடலாம்
என்றாலோ, சொல்வதற்கு நாணமாக இருக்கிறது" என்கிறாள்.