சுரத்தலும் ஆற்றேன்இந் நோயை நோய்செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். (குறள், 1162) உள்ளத்தில் அடங்கி இருக்கவும் முடியாமல், வெளிப்படவும் முடியாமல் உள்ள காதலுணர்ச்சி தாங்க முடியாத ஒன்றுதான். அடங்கி இருக்க முடியாததற்குக் காரணம், உடலின் இயற்கையோடு ஒன்றுபட்டதாக உள்ள காதலின் ஆற்றல். வெளிப்பட முடியாததற்குக் காரணம், குடும்பத்தின் பண்பாட்டோடு இயைந்து வளர்ந்த நாணம். ஆக ஒரு பக்கம் காதலும், மற்றொரு பக்கம் நாணமுமாக இருவகை உணர்ச்சிகளுக்கு இடையே போராட வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தை எண்ணிப்பார்க்கும் தலைவி, தன் கண்ணெதிரே தெருவில் காவடி கட்டி இரண்டு கூடைகளைச் சுமந்து செல்லும் ஒருவனைக் காண்கிறாள். அவனுடைய தோள் மேலே ஒரு பெரிய கொம்பு, அதன் ஒரு முனையில் ஒரு கூடையும் மற்றொரு முனையில் வேறொரு கூடையும் தொங்குகின்றன. அந்தக் கூடைகள் இரண்டும் பொருள் நிறைந்து சுமப்பதற்கு அருமையாக உள்ளன. சுமை எல்லாம் அந்த ஒரு கொம்பு தாங்க வேண்டியுள்ளது. பார்க்கும் தலைவிக்கு அதன்மேல் இரக்கம் தோன்றுகிறது. பெரிய கூடைகள் இரண்டையும் இந்தக் கொம்பு அல்லவா சுமந்து வளைகிறது என எண்ணுகிறாள். இந்தக் கூடையில் பொருள் மிகுந்தாலும், அந்தக் கூடையில் பொருள் குறைந்தாலும் சுமப்பவன் சமப்படுத்திச் சுமக்க முடியாமல்போகும் என்பதையும் எண்ணுகிறாள். அவளுக்கு தன்னுடைய வாழ்வே அப்போது நினைவுக்கு வருகிறது, யாரும் இந்தக் காதலை அறியக் கூடாது என்னும் நாணம் ஒரு பக்கம் தன் உயிரை வருத்துகிறது. மறைத்து அடக்க முடியாமல் எழும் காதல் துன்பம் மற்றொரு பக்கம் தன் உயிரை வாட்டுகிறது. இந்த இருவகை உணர்ச்சிகளை |