10. பிரிவுத் துன்பம் காதலன் குடும்பத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் கட்டுப்பட்டுப் பல கடமைகள் மேற்கொள்ள வேண்டியவன். ஒரு கடமையின் காரணமாக வெளியூர்க்குச் சென்று பிரிந்திருக்க நேர்ந்தது. அந்தப் பிரிவின்போது காதலி மிக வாடி வருந்தினாள். அவள் நெஞ்சத்தில் காதலனுடைய அன்பு உண்மையானதா என்ற ஐயமும் ஏற்பட்டது. உண்மையான அன்பு இருந்தால் இத்தனை நாள் பிரிந்திருக்க முடியுமா என்று எண்ணத் தொடங்கினாள். "உண்மையான காதல் என்பது விதை இல்லாத இனிய பழம் போன்றது, காதலரை விரும்பும் அன்பு இருந்தால் மட்டும் போதாது. அந்தக் காதலரும் அவ்வாறு அன்பு கொண்டால்தான், அந்தக் காதல் அத்தகைய பயன் உள்ளதாகும். விரும்பப்படும் காதலரும் தம் விருப்பமான அன்பை அளித்தால், அது வாழும் மக்களுக்கு மழை தரும் பயன் போன்றதாகும். நாம் மட்டும் அன்பு செலுத்திக் காதல் கொண்டால், அந்தக் காதலர் நம்மிடம் அன்பு செலுத்தாவிட்டால், அவரால் நமக்கு என்ன நன்மை செய்ய முடியும்? காதல் என்பது காவடிபோல் இரு பக்கமும் ஒத்திருந்தால்தான் இன்பமானது; ஒரு பக்கம் மட்டும் இருப்பது துன்பமானதே" என்று பலவாறு எண்ணினாள்,
|