பக்கம் எண் :

60குறள் காட்டும் காதலர்

ஏக்கத்திற்கு இடையே பகற்பொழுதெல்லாம் கழிந்தபிறகு, இரவு
வருகிறது. இரவிலும் நெடுநேரம் உறக்கம் இல்லாமல் விழித்தபடியே
வருந்துகிறாள். கடைசியில் எவ்வாறோ அரிதில் வந்து அமைகிறது
உறக்கம். அந்த உறக்கத்தில் கனவு ஒன்று வருகிறது. அவ்வாறு வந்த
கனவில், அவள் காண்பவை என்ன?

பிரிந்து சென்ற காதலனிடமிருந்து ஒருவன் வருகிறான். "உம் நாயகர்
இன்ன ஊரில் இருக்கிறார். அவர் தான் என்னை அனுப்பினார்.
நலமாகஇருக்கிறார். அவரைப் பற்றி உமக்குக் கவலை வேண்டா" என்று
அந்தத் தூதன் சொல்கிறான். அதைக் கேட்கும் காதலி
மகிழ்ச்சியுறுகிறாள். உடனே கனவு கலைகிறது, விழித்துப் பார்க்கிறாள்.
தன் மகிழ்ச்சி போலி என்றும், வந்தவன் உண்மையான தூதன்
அல்லன் என்றும், கண்டது வெறுங் கனவே என்றும் உணர்கிறாள்.

கனவில் பெற்ற மகிழ்ச்சி மறைந்தது. ஏமாற்றமே இப்போது அவள்
அடைந்தது. அந்த ஏமாற்றமும் மெல்ல மாறுகிறது.

பகல் முழுதும் தான் வருந்திக்கொண்டிருந்த துயரத்தை நினைத்துப்
பார்க்கிறாள்; உறக்கம் வராமல் நெடுநேரம் விழித்திருந்து வருந்திய
நிலையையும் நினைத்துப் பார்க்கிறாள். அப்போது தன் உள்ளம்
உற்றிருந்த துயரநிலை எவ்வாறோ மாறியதை உணர்கிறாள். இப்போது
அப்படிப்பட்ட துயரம் இல்லை; ஒரு சிறு ஏமாற்றம் வந்தது; அதுவும்
மாறியது. பெருங் கலக்கமாக இருந்த துயர நிலைமை எவ்வாறு
மாறிவிட்டது என்று எண்ணுகிறாள்.

துயரம் மாறியதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை. கண்ட
கனவுதான் காரணம். கனவு உண்மை அன்று; வந்த செய்தியும்
உண்மை அன்று. ஆயினும் அந்தக் கனவு தன் துயரத்தை
மாற்றிவிட்டது. துயரத்திற்கு மருந்தாக வந்த