வேறுபாடு ஒன்றும் இல்லையே என்கிறாள். காணும் அந்த நேரத்திற்கு மட்டுமே இன்பம் உள்ளது என்கிறாள். நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இனிது. (குறள், 1215) இவ்வாறு எதையோ எண்ணி எவ்வாறோ ஆராய்ந்து, ஒருவாறு ஆறுதல் பெற்ற அவளுடைய மனம், தன்னைப் போல் காதலரைப் பிரிந்து வருந்தும் பெண்களைப் பற்றி எண்ணுகிறது. அவளுக்கு ஆறுதல் கூறுவதுபோல் வந்து, இந்த வீட்டில் இவள் வருந்துகிறாள் என்றும், அந்த வீட்டில் அவள் கலங்குகிறாள் என்றும், கணவன்மாரைப் பிரிந்து வருந்தும் மகளிர் பலர் ஊரில் உள்ளனர் என்றும் சிலர் அவளிடம் சொன்ன செய்திகள் நினைவுக்கு வருகின்றன. தம் தம் துணைவரைப் பிரிந்து வருந்தும் அந்தப் பெண்களின் துயர நிலையைவிடத் தன்னுடைய நிலைமை எவ்வளவோ மேல் என்று எண்ணுகிறாள். "எனக்கு அமைந்த கனவு போல் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல கனவுகள் அமைவதில்லையோ? கனவிலே தம் காதலரைக் காணாத காரணத்தால் தான், நனவிலே கணவர் வரவில்லையோ? என்று அந்தப் பெண்கள் நோகிறார்கள்" என்கிறாள். நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். (குறள், 1219) காதலனைக் கனவில் கண்ட நங்கை மறுநாள் அதைக் குறித்துப் பலவாறு எண்ணுகிறாள். கனவிலாவது காதலனைக் காண முடிந்ததே என்று சில வேளைகளில்அவளுடைய மனம் மகிழ்கிறது; ஒரு வகை ஆறுதல் அடை |