பக்கம் எண் :

64குறள் காட்டும் காதலர்

கிறது, ஆனால் சில வேளைகளில் வேறு வகையாக உணர்கிறாள்.
"கனவில் அவரைக் கண்டதால் பயன் என்ன? அவரைக்
காணவேண்டும் என்ற ஏக்கம்தான். அதன் பிறகு என் நெஞ்சில்
மேன்மேலும் வளர்கிறது. அந்தக் கனவு காணாமலே இருந்திருந்தால்
நன்மையாக இருக்குமே" என்று வருந்துகிறாள்.

அவளுடைய அறிவு மயங்குகிறது. "நனவிலே வந்து நம்
துன்பத்தைத் தீர்க்கவேண்டிய காதலர் ஒரு முறை நேரில் வந்து
போகக்கூடாதா? நனவில் ஒரு முறையும் வர மனம் இல்லாதவர்,
கனவில் மட்டும் ஏன் வரவேண்டும்" என்று ஊடுவது போன்ற
நிலையில் சிறிது சினம் கொண்டு எண்ணுகிறாள். மகிழ்விக்க முன்வராத
ஒருவர்க்கு, துன்புறுத்துவதற்கு மட்டும் உரிமை ஏது? "நனவில் அருள்
செய்யாத கொடுமை உடைய அவர் கனவில் மட்டும் வந்து நம்மை
வருத்துவது ஏன்?" என்கிறாள்.

நனவினால் நல்காக்
கொடியார் கனவினால்

என்எம்மைப் பீழிப் பது? (குறள், 1217)

இந்த மனநிலை படிப்படியாக மாறிவருகிறது. தொடர்ந்து பல நாள்
பிரிவுத் துன்பத்தால் வாடி மெலிந்துள்ள தன் நிலையைத்தானே
இரக்கத்தோடு எண்ணிப்பார்க்கிறாள். இவ்வளவு துன்பத்தையும்
தாங்கித் தான் உயிரோடு இருப்பதே ஒரு வியப்பாகத் தோன்றுகிறது.
எப்படி இன்னும் உயிரோடு வாழமுடிகிறது என்று வியப்புறுகிறாள்.
"அவரைக் காணாமலே நெடுங்காலம் உயிர் வாழமுடியாதுதான், கனவில்
இப்படி இடையிடையே அவரைக் காண முடிகிறது. நனவில் கண்டால்
தான் ஆறுதல் என்று இல்லை. கனவில் கண்டாலும் ஓரளவு ஆறுதல்
ஏற்படுகிறது.