நனவிலே வந்தருளாத அவரைக் கனவிலே காண்பதால்தான் என் உயி்ர் நீங்காமல் உள்ளது" என்கிறாள். நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டுஎன் உயிர், (குறள், 1213) பித்துப் பிடித்தவள் போல் அவள் மாறி மாறி இந்த எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறாள். அவளுக்கு நனவும் கனவும் ஏறக்குறைய ஒரே வகையாக உள்ளன. ஆனால் காதலனைக் காணஉதவும் கனவு, காதலன் இல்லாத நனவை விட நல்லது என்று உணர்கிறாள். பயன் ஒன்றும் இ்ல்லாத சொந்த ஊரைவிட, பயன் தருகின்ற வெளியூரே மேலானது என்பது போன்ற எண்ணம் இது. காதலனைக் காண இடந்தராத இந்த நனவு-பகல்-ஏன் உள்ளது என்று வெறுக்கிறாள். இதைவிட அந்தக் கனவே தொடர்ந்து இருந்து வந்தால் காதலனைக் கண்டு கொண்டே இருக்க முடியுமே. ஆகவே, அவளுடைய காதல் வாழ்க்கைக்குக் கனவு உதவியாக இருக்கிறதாம்; நனவுதான் இடையூறாக உள்ளதாம். நனவு என்று ஒன்று இல்லையானால், காதலன் அவளை விட்டு நீங்காத நல்ல வாழ்வாக அமையுமாம். நனவுஎன ஒன்றுஇல்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். (குறள் 1216) பகலெல்லாம் இப்படி பித்தர் நிலையில் மனம் மயங்கி எண்ணிக்கொண்டு பொழுது போக்குகிறாள். மறுபடியும் இராக்காலம் நெருங்கி வருகிறது. "இன்று இரவு கனவு வரும். வந்தால் அந்தக் கனவில் அவரைக் கண்டு மகிழ்வேன்" என்று ஆசை கொள்கிறாள். முந்திய நாள் கண்ட கனவில் காதலனைக் கண்டு மகிழ்ந்தாளே அல்லாமல் பேசி மகிழ |