பக்கம் எண் :

68குறள் காட்டும் காதலர்

நேரும்போது, மனம் நண்பர் கூட்டத்தையோ, ஆடல்பாடலையோ,
வேறுவகைப் பொழுதுபோக்கையோ நாடுவதில்லை. அந்தத்
துயரத்திலே ஆழ்ந்து இருப்பது ஒன்றே வழி ஆகின்றது. அவ்வாறு
துயரத்திற்கு ஆளானவர்களும் காலையில் வருந்துவதைவிடப்
பலமடங்கு மிகுதியாக வருந்துகிறார்கள். இவ்வாறு துன்பம்
மிகுவதற்குக் காரணம் மாலைக் காலம் என்று தோன்றும். ஆனால்,
உண்மைக் காரணம் மாலைக்காலம் அன்று; அப்போது உடல்நரம்புகள்
உற்றிருக்கும் சோர்ந்த நிலையே காரணம் ஆகும்.

உடல்நரம்புகள் சுறுசுறுப்புடன் இருக்கும்போது மகிழ்ச்சி இரண்டு
மூன்று மடங்கு வளர்கிறது; உடல் நரம்புகள் சோர்ந்திருக்கும்போது
அந்த மகிழ்ச்சி குறைகிறது; ஆனால் துன்பமோ அப்போது இரண்டு
மூன்று மடங்கு பெருகுகிறது, நோயாளிகளின் மன நிலையைக்
கொண்டும் இதைக் கண்டு கொள்ளலாம். எந்த நோயும் காலையில்
நலிவு செய்தலை விட, மாலையில் மிகுதியாக நலியச்செய்கிறது.
நோயாளி படும் துன்பம், பொழுது சாயச் சாய வளர்கிறது. இரவில்
அளவு கடந்து வருத்துகிறது. நோயாளியின் மனமும் அப்போது
பெருந்துயரம் அடைகிறது. ஆகையால், உடல் நரம்புகளின் நிலையை
ஒட்டி மனநிலையும் மாறுவதை உணரலாம்.

காதல்நோய் உற்றவர்களின் மனநிலையும் இப்படிப்பட்டதே. பிரிந்த
காதலனைப் பற்றி நினைந்து நினைந்து வருந்தும் நங்கையின் மனம்,
காலையில் எப்படியோ ஒருவாறு தேறி இருக்கிறது; அவளுடைய
முயற்சி இல்லாமலும் துயரம் குறைந்திருக்க முடிகிறது; ஆனால்,
மாலையில் அந்தத் துயரம் படிப்படியாக வளர்ந்துவிடுகிறது, அவள்
எவ்வளவு முயன்றாலும் துயரத்தை அடக்குவது அரிது ஆகிறது;
தோழி முதலானவர்கள் எவ்வளவு தேற்றினாலும், பயன்விளை