பக்கம் எண் :

12.மாலைத் துயர்69

யாமற்போகிறது, இதற்கு உண்மையான காரணம் மாலைப் பொழுது
அன்று; உடல் நரம்புகளை ஒட்டி அமையும் மன நிலையே காரணம்
ஆகும். ஆனாலும், மாலைப் பொழுதுதான் துயரத்தை வளர்த்து
வருத்துகிறது என்று சொல்வதும் பாடுவதும் வழக்கம்,

புகைவண்டியிலே செல்லும்போது காணும் மரங்கள் எல்லாம்
ஓடுவதுபோல் தோன்றும்; தோன்றும் தோற்றம் உண்மை அன்று
என்பது நமக்குத் தெரியும். ஆனால் குழந்தை மனம் அந்த
மரங்களின் ஓட்டத்தைக் கண்டு வியப்பு அடைகிறது. பூமி சூரியனைச்
சுற்றி வருவதாக அறிவியல் விளக்குகிறது. ஆனால் சூரியன் பூமியைச்
சுற்றிவருவதாகச் சொல்லும் கற்பனையில் அழகு உள்ளது. தோன்றும்
தோற்றம் பொய்யாக இருக்கலாம்; ஆனால் அதைக்கொண்டு வளரும்
கற்பனை அழகாகஅமைகிறது. பொய்யின் அடிப்படையில் வளர்ந்த
கற்பனையே ஆனாலும் மெய்யான அனுபவங்களை உணர்த்தும்
ஆற்றல் அதற்கு அமைந்துள்ளது.

காதலனைப் பிரிந்த நங்கை ஒருத்தி, தன் துயரம் வளர்ந்ததற்குக்
காரணம் மாலைப் பொழுதுதான் என்று பழிக்கிறாள். அது பொய்தான்.
ஆனாலும், புலவர் அதைக் கற்பனையாக்கிப் பாடும்போது
உண்மையான அனுபவ உணர்ச்சிகளை உணர்ந்து மகிழ்கிறோம்.

மாலைப்பொழுது தொடங்கிவிட்டது, பனி பரவுகிறது, சுற்றிலும்
ஒளிகுறைகிறது. அப்போது தனித்திருந்து வருந்தும் நங்கை
வாழ்க்கையையே வெறுத்து வருந்துகின்றாள்; தன் துன்பம் வளர்வது
போல் உணர்கிறாள்.

பனிஅரும்பிப் பைதல்கொள்
மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும். (குறள், 1223)