இவ்வாறு மாலைக்காலம் துன்பத்தை வளர்த்து வருத்த வல்லது என்ற அனுபவம் அவளுக்கு இதற்கு முன் தெரியாதாம். காதலன் பிரியாமல் வாழ்ந்த காலத்திலும் மாலைப் பொழுது இருந்தது. அப்போதும் நாள்தோறும் மாலைப் பொழுது வந்தது. ஆனால் அப்போதெல்லாம் இவ்வாறு மாலைக்காலம் தன்னை வருத்தியது இல்லையாம். இப்போது வருந்தும் நிலையில்தான், மாலைக்காலம் பொல்லாதது என்றும், துன்பம் தரவல்லது என்றும் அறிந்துகொண்டாளாம். மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். (குறள், 1226) காதலன் பிரிவால் ஏற்பட்ட துயரம் காலையிலேயே அவளுடைய நெஞ்சில் இருந்தது. ஆனாலும், காலையில் அவ்வளவாகத் துயரப்படவில்லை, மாலையில்தான் துயரம் முழு வடிவம் கொள்கிறது. இவ்வாறு, காலைப்பொழுது தன் துயரத்தைக் குறைத்து உதவி செய்வதற்கும், மாலைப் பொழுது தன் துயரத்தை வளர்த்துத் தீங்கு செய்வதற்கும் ஏதேனும் காரணம் இருக்கவேண்டுமே என்று எண்ணுகிறாள். "நான் காலைப் பொழுதிற்கு ஒரு நன்மையும் செய்யவில்லையே. அது எனக்கு உதவுகிறதே! அதுபோலவே, மாலைப் பொழுதிற்கு நான் ஒரு பகையும் செய்யவில்லை, அது மட்டும் என்னை வருத்துவது ஏன்?" என்கிறாள். காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை? (குறள், 1225) மறுபடியும் எண்ணிப் பார்க்கிறாள். காலையில் சிறிதளவாக இருந்த துயரம், மாலையில் பேரளவில் வளர்ந்து நிரம் |