பிவிட்டதே; இது எப்படி திடீரென்று வளர்ந்து விடுகிறது என்று எண்ணிப் பார்க்கிறாள். திடீரென வளர்ந்திருக்க முடியாது. அவளுடைய கண்ணெதிரே முல்லை மலர்ந்து விளங்கியது. அது உண்மை உணர்த்தியது. முற்றத்தில் பூத்துள்ள அந்த முல்லைப் பூ எதிர்பாராமல் திடீரென்று பூக்கவில்லை; காலையில் சின்ன அரும்பாக இருந்தது, பகலில் மெல்ல வளர்ந்து ‘போது‘ என்று சொல்லும் பேரரும்பாக உருவம் கொண்டது. மாலைப்பொழுது வந்தவுடனே அந்தப் பேரரும்பு விரிந்து மலர்ந்துவிடுகிறது. இந்தக் காதல் துயரமும் அதுபோல் அரும்பாக இருந்து படிப்படியாக வளர்ந்து மலர்ந்ததுதான் என்று உணர்கிறாள். காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். (குறள், 1227) மனம் தனக்கு என்று ஒரு நிலையான போக்கு இல்லாதது. இப்போது ஒரு பொருளைப் பற்றி ஒருவகையாக எண்ணும். சிலநொடிப்பொழுது கழிந்தவுடன், இதே மனம் இதே பொருளைப் பற்றி வேறொருவகையாக எண்ணும். அடிக்கடி மாறுவது மனத்தின் இயற்கை. அறிவின் திட்பம் உடையவர்க்கே மனம் அடங்கி ஒரு நெறிப்பட்டு நிற்கும். காதலர் உணர்ச்சி வயப்பட்டவர் ஆதலால் அவர்களின் மனம் ஒரு நெறியில் நிற்காமல் மாறி மாறி அலைவது இயற்கையாகும். காதலனைப் பிரிந்து வருந்தும் நங்கை தன்னை ஒரு பக்கம் வைத்து, உலகை ஒரு புறம் பார்க்கிறாள். ஒரு சமயம், இந்த உலகமும் தன்னைப்போல் துயரப்படுவதாக உணர்ந்து உருகுகிறாள். மற்றொரு சமயம், உலகம் தன் துயரத்திற்குக் காரணமாக இருப்பதாக எண்ணி நோகிறாள், |