இங்கே இவளுடைய பிரிவாற்றாமை மாலைப்பொழுதில் மலர்கின்ற துயரமாக இருப்பதால், அந்த மாலைப் பொழுதையே எண்ணிப் பார்க்கிறாள். மாலை நேரத்தில் ஒளி குறைந்துள்ள காட்சி, இருந்த அழகை இழந்துவிட்டு வருந்தும் காட்சிபோல் தோன்றுகிறது. பகலெல்லாம் பறவை விலங்குகளின் வாழ்க்கையிலும் மக்களின் வாழ்க்கையிலும் இருந்து வந்த ஆரவாரமும் மகிழ்ச்சியும் விரைவான போக்குவரத்தும் பரபரப்பும் மாறி, அமைதியும் அடக்கமும் ஓய்தலும் ஒடுங்குதலும் இருப்பதையும் அவள் காண்கிறாள். உலகம் ஏதோ ஒருவகையாக மாறிவிட்டது போல் அவள் உணர்கிறாள். இத்தனை நாளாக இருந்து வந்ததுபோல் இராமல், இன்றைய மாலையில் உலகமும் தன்னைப்போல் வாடி வருந்துவதாக உணர்கிறாள். இத்தனை நாளாக உலகம் மாலை வேளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் ஓய்ந்து வந்திருக்கிறது. ஆனால், இவள் அதை உணராத காரணம் என்ன? அப்போதெல்லாம் இவளுடைய மனத்தில் துயரம் இல்லாமல், மகிழ்ச்சி இருந்து வந்தது. அதனால் இவள் இத்தனை நாளாக மாலைப் பொழுது பொலிவு இல்லாமல் விளங்குவதை உணரவில்லை. தலைவலி இன்னது என்று அறியாத ஒருவன், உலகத்தில் தலைவலி பரவியிருப்பதை நன்றாக உணரமாட்டான். அவனுக்கு ஒருநாள் கடுமையான தலைவலி வந்தால்தான் தலைவலி பொல்லாதது என்பான்; தலைவலி வந்தவர்களோடு பேசுவான்; உலகத்தில் தன்னைப்போல் பலரும் தலைவலியால் வருந்துவதை உணர்வான். "அப்பாடா! எந்த நோய் வந்தாலும் வரலாம்; தலைவலி வரக்கூடாது. இதற்கு ஒரு நல்ல மருந்து கண்டுபிடிக்கக் கூடாதா? தலைவலியால் எத்தனை மக்கள் வருந்துகிறார்கள்! உலகமெல்லாம் தலைவலி இருப்பதாகத் தெரிகிறதே" என்பான். இது போலவே, ஒரு துன்பத்தைப் பட்டறிந்த பிறகே, அந்தத் |