துன்பம் உலகெல்லாம் இருப்பதாக உணர முடிகிறது. இந்த நங்கையும் அப்படித்தான் மாலைப்பொழுது பொலிவற்றது என்ற உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவத்திற்குப் பிறகு உணர்கிறாள். இவளுக்கு இப்போது தன்னுடைய உடலின் வாட்டமும் வருத்தமும் நினைவுக்கு வருகின்றன. "நான் வாடி வருந்தக் காரணம் உண்டு. காதலர் கல் மனத்தோடு என்னைவிட்டுப் பிரிந்தார். அதனால் நான் வாடி வருந்துகிறேன். இந்த மாலைப் பொழுதும் என்னைப் போலவே வருந்தி வாடியுள்ளதே, இதற்குக் காரணம் என்ன? இந்தப் மாலைப் பொழுதும் என்னைப்போல் ஒருவரைத் துணையாக நம்பி வாழ்ந்து வந்ததோ? அந்தத் துணை பிறகு கைவிட்டுப் பிரிந்து போனதோ? என் துணைபோல், இதன் துணையும் வன்னெஞ்சம் உடையதோ?" என்கிறாள். புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை? (குறள், 1222) இவ்வாறு மாலைப்பொழுது வருந்துவதாக எண்ணி அதனிடம் இரக்கம் கொண்டது போலவே தான் வாழும் ஊரைநோக்கியும் இரக்கம் கொள்கிறாள். ஊராரின் வாழ்வில் ஒருவகை மயக்கம் இருப்பதாக உணர்கிறாள். அவர்கள் எல்லோரும் பகலில் இருந்ததுபோல் இப்போது இல்லை. என்ன காரணத்தாலோ மயங்கித் துன்புறுவதுபோல் தோன்றுகிறார்கள். "மாலைப்பொழுது வந்து படரும்போதுஎனக்குத்தான் அறிவு மயங்குகிறதோ என எண்ணினேன். இந்த ஊரும் என்னைப்போல் மயங்கித் துன்பத்தால் வருந்துகிறதே" என்கிறாள். பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து(குறள், 1229) |