சிறிதுநேரம் கழிகிறது. நங்கையின் அறிவுதெளிகிறது. தன் துயரத்தின் உண்மையான காரணம் தெரிகிறது. காதலன் பொருள் தேடவேண்டும் என்று நாட்டைவிட்டுப் பிரிந்து சென்ற முயற்சியே தன்துயரத்திற்குக் காரணம். இவ்வாறு தன்னைத் துன்பத்திற்கு ஆளாக்கிப் பொருளைத் தேடிச் சென்றவர் எவரோ அவரையே நாடுகின்றது மனம். அதனால் மயங்கிவரும் மாலைப்பொழுதில் உயிர் வாடி வருந்துகிறது. "அந்தக் காதலன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்துபோன அன்றே இந்த உயிர் துன்பம் தாங்கமுடியாமல் மாய்ந்திருக்கவேண்டும். அப்போது மாயாத உயிர், இப்போது இந்த மாலைக் காலத்தில் மாயும்போல் தோன்றுகிறது" என உணர்கிறாள். பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர், (குறள், 1230) சிறிது நேரத்தில் மீண்டும் அறிவு மயங்கத் தொடங்குகிறது, ஆனால், இப்போது இவளுடைய மனம் மாலைப் பொழுதைக் கண்டோ ஊரைக் கண்டோ இரக்கம் கொள்ளவில்லை. மாலைப்பொழுதும் ஊரும் தன்னைப்போல் வாடி வருந்துவனவாகத் தோன்றவில்லை. அதனால் மாலைக் காலத்தின்மேல் இரக்கம் கொள்வதைவிட்டுச் சினம் கொள்கிறாள். "மாலைப்பொழுதே, வாழ்ந்து போ!" என்று பழிக்கிறாள். "பிரிந்து சென்ற காதலர் என் உயிரை வாட்டவில்லை. அவர் என் உயிரை என்னிடமேவிட்டுச் சென்றார். நீதான் பொல்லாத காலம். என்னிடமிருந்து என் உயிரை நீதான் எமனாகப் பிரிக்க வந்திருக்கிறாய். நீ மாலை என்னும் பொழுது அல்லை. காதலர்களின் உயிரைத் தின்னவரும் கொடிய எமன்போன்ற முடிவுக்காலம் நீ!" என்கிறாள். மாலையோ அல்லை! மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. (குறள், 1221) |