பக்கமாக வந்து, இவளுடைய தோளை உற்றுப் பார்த்து விட்டு, "ஏன் அம்மா! என்ன உடம்புக்கு? உன் கணவர் எங்கே போயிருக்கிறார்?" என்று கேட்டுச் சென்றாள். சென்ற பிறகு இவள் தனக்குள் எண்ணிப்பார்க்கிறாள், "அவளுக்கு இந்தச் செய்தி எப்படித் தெரிந்துகொண்டாள்? ஆம்! அவள் என் தோளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். காதலரின் உறவு ஏற்பட்ட தொடக்கத்தில் என் தோள்கள் மகிழ்ச்சியால் பூரித்தன. அந்தப் பூரித்த நிலையைக் கண்டவள் அவள். இப்போது தோள்கள் வாடியிருப்பதைக் கண்டதும், சொல்லாமலே தெரிந்துகொண்டாள். யான் மறைத்து வைக்கும் செய்தியை இந்தத் தோள்கள் நன்றாக அறிவிக்கின்றன போலும்!" என்கிறாள். தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள், (குறள், 1233) நெருங்கிப் பழகிய தோழி ஒரு நாள் வந்தாள். நங்கையின் தோள்களின் மெலிவை-தொடி கழலும் அளவுக்கு மெலிந்த மெலிவை--கண்டு வருந்தினாள். "இவ்வாறு உன் தோள் மெலிந்து வாடும்படியாக அவர் உன்னைக் கைவிட்டுச் சென்றாரே! என்ன கொடுமை அம்மா! அவர் கொடியவர்!" என்றாள். இப்போதும் நங்கை தன் தோளை நினைந்தே வருந்தத் தொடங்குகிறாள். "அவள் என் உயி்ர்த் தோழியாக இருந்தும், அவளிடம் என் துயரத்தை எடுத்துரைக்காமல் மறைத்து வாழ்ந்தேன். அப்படி இருந்தும் அவளாகவே உணர்ந்து எனக்காக வருந்தினாள். இதற்கு நான் என்ன செய்வேன்? நான் சும்மா இருந்தாலும், என் தோள்களின் வாட்டம் அவளுடைய மனம் வருந்தும்படியாகச் செய்கிறது. காதலருடைய கொடுமையை நான் ஒருநாளும் தூற்றுவதில்லை; ஆனால், என் தோள்கள் அவருடைய கொடுமையை வெளிப்படுத்திச் சொல்லிவிடுகின்றன" என்கிறாள், |