கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள், (குறள் 1235) காதலனைக் ‘கொடியவர்‘ என்று பழித்துவிட்டுத் தோழி பிரிந்து சென்று நெடுநேரம் ஆயிற்று. நங்கை மற்றவற்றை எல்லாம்விட்டாள், ‘கொடியவர்‘ என்று அவள் பழித்த சொல்லை மட்டும் மறக்கவில்லை. தன் காதலனைக் ‘கொடியவர்‘ என்று இவளே பலமுறை தனக்குள் எண்ணி எண்ணி நொந்தது உண்டு. அவர் விட்டுப் பிரிந்தது கொடுமையான செயல் என்பதை இவளுடைய மனமே உணர்ந்து வருந்தியிருக்கிறது. ஆனால்அதைப்பற்றி இவள் வருந்தவில்லை. ‘கொடியவர்‘ என்று பழித்தது இப்போது இவளுடைய நெஞ்சை உறுத்துகின்றது. காதலனுடைய புகழைக் காப்பதே கடமையாகக்கொண்ட கற்பு மிக்கவள் இவள். ஆகையால் இப்போது தன் கணவனைப் பற்றிய பழியைப் பிறர் அறிவார்களே என்று வருந்தினாள். தாய் தன் மகனை எவ்வளவும் பழிப்பாள்; ஆனால் பிறர் அவனைப் பழித்தால் அதற்காக மனம் வருந்துவாள். இது இயற்கை. காதலியும் இவ்வாறே. தன் கணவனைத் தான் பழித்தாலும் பழிக்கலாம், பிறர் பழிக்கக் கூடாது என்கிறாள். அதனால் பிறர் பழித்துச் சொன்ன சொல்லை--நினைத்து மிக வருந்துகிறாள், "தலைவர் பிரிந்து சென்றதற்காக நான் வருந்தியதைவிட, இந்தச் சொல்லைக் கேட்டபிறகுதான் மிக வருந்துகிறேன். அப்போது தொடியும் தோளும் நெகிழ்ந்து வாடியதைவிட, இப்போதுதான் மிக வாடுகின்றன, ஏன்? அவரைக் கொடியவர் என்று பிறர் கூறுவதைக் கேட்டு என் மனம் நோகிறது; யான் முன்னிலும் மிக வருந்துகிறேன்" என்கிறாள். தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியவர் எனக்கூறல் நொந்து (குறள், 1236) |