துன்பத்தை உண்டாக்கியவர் அவரே. ஆனால், அவர் இதற்காக வருந்தவில்லை; வருந்த நினைக்கவில்லை. நீ மட்டும் என்னோடு இருந்தபடியே அவரை நினைந்து நினைந்து வருந்துவது ஏன்?" என்கிறாள். இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல், (குறள், 1243) நெஞ்சம் அவளுக்கு மறுமொழி கூறியதுபோலும். "அவர் நம்முடைய காதலர் அல்லவா? அவர் கொண்ட காதலை நாம் எப்படி மறக்க முடியும்? அதனால்தான் நினைந்து வருந்துகிறேன்" என்று நெஞ்சம் சொன்னது. நங்கை அந்த நெஞ்சத்தை மாற்ற முயல்கிறாள். "அவர் நம்மிடம் காதல் கொண்டார் என்பது பழங்கதை. இப்போது அவர்க்கு நம்மிடம் காதல் இல்லை. காதல்அல்லாதபோது நீ அவர்க்காக வருந்துவது உன்னுடைய அறியாமைதான்" என்கிறாள். காதல் அவர்இல ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு, (குறள், 1242) முன்பு அவள் கலங்கியபோது நெஞ்சம் வேறு போக்கில் இருந்தது, இப்போது அவள் ஒருவாறு தெளிந்து நிற்கும் போது, நெஞ்சம் கலங்கி வருந்துகிறது. வாழ்க்கையில் இடர்ப்பாடும் துன்பமும் வரும்போதெல்லாம் நெஞ்சம் எதிர்க் கட்சியாக நின்று கலக்கும்போல் தெரிகிறது. |