கொண்டிருக்கிறாய்?" என்று அவர்கள் குறை கூறும்போதுதான், தன் நினைவு அவளுக்குத் தெரிகிறது, உண்ணும் உணவிலும் அவளுடைய நெஞ்சம் பதியவில்லை, தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் ஆர்வம் இல்லை. கடமைகளையும் புறக்கணித்து மறந்து, காதலனை நினைந்து போய்விடுகிறது அவளுடைய நெஞ்சம். இந்த நிலையில் தனித்து வருந்தி வாடிமெலியும் தலைவியின் துயரத்தை விளக்க வேண்டும் என்று முயல்கிறார் திருவள்ளுவர், ஒரு நாடக மேடை அமைக்கிறார். அந்தக் கற்பனை நாடக மேடையில் நடிப்பவள் காதலி ஒருத்தியே. வேறு யாரும் நடிப்பதற்கில்லை. அவளுடைய தனிமைத் துயரைப் புலப்படுத்தும் நாடகத்தில் வேறு யாரும் வருதல் பொருந்தாது. ஆயினும் கற்பனை நாடகம் திறம்பட அமைகிறது. நால்வர் நடிக்கும் மேடையாக அமைக்கிறார் திருவள்ளுவர், தாய் ஒருத்தி; குழந்தைகள் மூன்று. நோயால் வாடி மெலிந்தவள் அவள். தன் குழந்தைகளைத் தானே சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் உடல் வளமை இழந்துவிட்டாள். ஆனால் இளங் குழந்தைகள் வீட்டிற்குள்ளே கட்டுபட்டுக் கிடக்க விரும்பவில்லை; வெளியே சென்று யாரையோ துணையாகக் கொண்டு விளையாட விரும்புகின்றன. பெரிய குழந்தை தானாகவே தெருவுக்குப் போய் விளையாடவல்லது. சின்ன குழந்தைகளோ, அப்படிப்பட்டவை அல்ல. அவற்றிற்கு ஒரு துணை வேண்டும். அவைகளும் வெளியே போய் வேடிக்கை பார்க்கத் துடிக்கின்றன; தொந்தரவு செய்கின்றன; தாயை வற்புறுத்துகின்றன. ‘நான் போக வேண்டும், நானும் போக வேண்டும்‘ என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்து |