பக்கம் எண் :

88குறள் காட்டும் காதலர்

தெரியாமல் போய்விட்டது. "காதல் ஆற்றல் மிகுந்தது. நெஞ்சத்தின்
உறுதி என்னும் கதவை--நாணம் என்னும் தாழ்போட்ட நெஞ்சக்
கதவை-இந்தக் காதல் கோடாரியாய் உடைத்துத் திறந்துவிடுகிறது.
தம்மை வெறுத்து ஒதுக்கியவரின் பின்னே செல்லாத மானம் ஒன்று
உண்டு. ஆனால் காதல்நோய் உற்றவர்கள் அறியாத ஒன்று அது. பல
மாயங்கள் வல்ல கள்வனாகிய காதலனுடைய பணிவான மொழி
என்னுடைய பெண்மையை உடைக்கும் படையாகிவிடுகிறது. அவரிடம்
வெறுப்புக் காட்டி ஊடல் கொள்ள வேண்டும் என்று சென்றேன்.
ஆனால், என் நெஞ்சம் அவரிடம் கலந்து குழைவதைக் கண்டு
தழுவினேன். கொழுப்பைத் தீயில்இட்டாற்போல் உருகும் நெஞ்சம்
உடைய என் போன்றவர் ஊடல் கொண்டு நிற்போம் என்னும் வலிமை
உண்டோ?" என்கிறாள்..

காமக் கணிச்சி
உடைக்கும் நிறைஎன்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு (குறள், 1251)

செற்றார்பின் செல்லாப்
பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று (குறள், 1255)

பன்மாயக் கள்வன்
பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை (குறள், 1258)

புலப்பல்எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு, (குறள், 1259)