நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்பேம் எனல். (குறள், 1260) தன்னை ஒப்பனை செய்துகொண்டிருந்த காதலி, கண்ணுக்கு மைதீட்டிக்கொண்டிருந்தபோது, அது வரையில் உணராத ஓர் உண்மையை உணர்ந்தாள். மைதீட்டும் சிறு கோலையே கண் பார்க்கின்றது. அதை மையில் தோய்த்து எடுக்கும் வரையில் அதையே பார்த்துக்கொண்டிருக்கும் கண். அந்தக் கோல் மைதீட்டக் கண்ணை அணுகியவுடன், அதைக் காண்பதில்லை. உடனே அவளுடைய நெஞ்சில் அந்த உண்மை பளிச்சிடுகின்றது. "கணவரிடத்துப் பழி காண்கிறேன். அவர் வந்ததும் அந்தக் குற்றத்தைக் உணர்த்திப் பழிக்க வேண்டும் என்ற துணிவோடு இருக்கிறேன். ஆனால் அவர் அன்போடு என்னை அணுகியவுடன், அந்தப் பழியை மறந்துவிடுகிறேனே! கண்ணை அணுகியவுடன் மைதீட்டும் கோலைப் பார்க்க இயலாதது போல் உள்ளதே இது! கணவரைக் காணும்போது அவருடைய தவறுகளைக் காண முடியவில்லை. அவரைக் காணாதபோது தவறுகள் தவிர மற்றவற்றைக் காண முடியவில்லையே" என்று உணர்ந்தாள். எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து, (குறள், 1285) காணுங்கால் காணேன் தவறாய; காணாக்கால் காணேன் தவறல் லவை. (குறள், 1286) |