| வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம் | 165 |
| வந்து தமிழரின் சிறந்த நாகரிகத்தைக் கண்டுகொண்டதனால், தமிழ் மதங்களாகிய சிவநெறியையும் திருமால் நெறியையும் படிப்படியாகத் தழுவலாயினர். ஆயின், முத்தொழி லிறைவன் என்றே தமிழர் வழிபட்ட சிவனையும் திருமாலையும், அழிப்புத் தெய்வமும் காப்புத் தெய்வமுமாக முறையே ஒடுக்கி, தாம் புதிதாகப் படைத்த பிரமன் என்னும் படைப்புத் தெய்வத்தொடு சேர்த்து, முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்து, இரு தமிழ மதங்களையும் இந்துமதமென ஒருமைப்படுத்தித் தமதாக்கிக் கொண்டனர். | | தமிழரின் அகப் பொருளிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகைத் தொழில் தலைவர் பாகுபாட்டை, பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நாற்பாற் பிறவிக்குலமாகத் திரித்து, இந்தியப் பழங்குடி மக்களையெல்லாம் வெண்மை செம்மை பொன்மை கருமை என்னும் நிற அடிப்படையில், முன்னர் நால்வேறு வரணங்களாகவும் பின்னர் நூற்றுக்கணக்கான நிலைத்த குலங்களாகவும் பிரித்து, சின்னபின்னமாகச் சிதைத்து, அடியோடு அவர் ஒற்றுமையைக் குலைத்துவிட்டனர். இதற்குத் துணையாக இருந்தவர், முதுகுடுமிப் பெருவழுதியும் பெருநற்கிள்ளியும் பல்யானைச்செல்கெழு குட்டுவனும் போன்ற தமிழக மூவேந்தரே. | | ஆரியரின் முதலிலக்கியம், முதற்கண் ஒன்றாயிருந்து பின்னர் மூன்றாகவும் இறுதியில் நான்காகவும் வகுக்கப்பட்ட வேதமே. அது, இறந்துபட்ட அவர் முன்னோர் மொழியும் வடநாட்டுப் பழந்திரவிடமாகிய பிராகிருதமும் கலந்த, இலக்கியக் கலப்பு நடைமொழியில் இயன்றதாகும். அதில் எகர ஒகரக் குறிலின்மை, அதன் பிராகிருதக் கூற்றின் பெரும்பான்மையைக் காட்டும். | | தமிழர் பல்துறைப்பட்ட நாகரிகமும் பண்பாடும் தலைசிறந்து, உருவ வணக்கமும் உருவிலா வணக்கமுங் கொண்ட கடவுள் மதத்தைக் கடைப் பிடித்து வந்ததைக் கண்ட ஆரியர் (பிராமணர்), தமக்கென ஒரு பல் துறை யிலக்கியம் இருந்தாலன்றித் தமிழரை நிலையாக அடிப்படுத்த வியலா தென்று கண்டு, அதற்கேற்ற சொல்வளம் வேதமொழியில் இன்மையால், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டும் அவற்றினின்று நூற்றுக்கணக்கான சொற்களைத் திரித்துக் கொண்டும், வேத மொழியொடு தமிழ் கலந்த சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கை இலக்கியக் கலவை நடைமொழியில், முதலிரு கழக இலங்கு நூல்களை யெல்லாம் மொழி பெயர்த்துக்கொண்டு, மொழிபெயர்ப்பையே முதனூலென்றும், சமற்கிருதம் தேவமொழியாதலால், அதிலுள்ள சொற்களெல்லாம் சமற்கிருதமே யென்றும், ஏமாற்றி விட்டனர். எதிர்காலத்தில் கண்திறந்து எதிர்க்கும் தமிழர்க்குச் சான்றாகாவாறு, ஆயிரக்கணக்கான முதலிரு கழக நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. | | |
|
|