பக்கம் எண் :

166தமிழியற் கட்டுரைகள்

     வேதமொழி வேறு; சமற்கிருதம் வேறு. தமிழ் வரலாறறியாத மேலை மொழிநூலார், வேதமொழியை வேதச் சமற்கிருதம் (Vedic Sanskrit) என்பது, முற்காலப்படுத்தம் (Prochronism) என்னும் குற்ற மாகும். பழங்குடி மக்கள் மொழி ஆரியர் வருகைக்கு முந்திச் செய்யப்பட்டதென்னும் கருத்துப்பற்றிப் பிராகிருதம் என்றும் ஆரியர் இலக்கியமொழி வேதமொழியுந் தமிழும் கலந்து செய்யப்பட்டதென்னும் கருத்துப்பற்றிச் சமற்கிருதம் என்றும் பெயர் பெற்றன.
     ப்ரா = முன். ஸம் = கல. கிருத = செய்யப்பட்டது.
     சமற்கிருதச் சொற்களுள், ஐந்தி லிருபகுதி தமிழ்; ஒரு பகுதி மேலையாரியம்; ஒரு பகுதி பிராகிருதம்; ஒரு பகுதி புதிதாகப் புனைந்தது.
     ஆரிய மொழியில், மூவேறு காலத்தில் தமிழ்ச் சொற்கள் கலந்தன.
     1. திரவிடநிலை.
     2. வேதநிலை.
     3. சமற்கிருதநிலை.
     முதன்முதலாக ஆரியம் எனப் பெயர் பெற்றது இந்திய ஆரியமே, சென்ற நூற்றாண்டில் மாக்கசு முல்லரே, அதற்கினமான ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் அப் பெயராட்சியை விரிவுபடுத்தினர்.
     தமிழ் முந்தியதென்றும், பிராகிருதம் இடைப்பட்டதென்றும், இந்திய ஆரியம் கடைப்பட்டதென்றும், அறிதல் வேண்டும்.
     எ-கா :
  தமிழ் பிராகிருதம் இந்திய ஆரியம்
  வட்டம் வட்ட வ்ருத்த
  நடி-நடம்-நட்டம் நட்ட ந்ருத்த
     இவ் வுண்மை அறியாதார், தமிழ்ச் சொல்லைப் பிராகிருத வழியாக இந்திய ஆரியத்தினின்று தலைகீழாகத் திரிப்பர்.
     எ-கா: வ்ருத்த - வட்ட - வட்டம்.
     வல் - வள் - வட்டு - வட்டம் என்னும் வரலாற்றைத் தமிழில்தான் காணமுடியும்.
     மொழியென்பது மாந்தர் தொடர்பற்ற தனிப் பொருளன்று, ஒரு கூட்டத்தார் அல்லது இனத்தார், தம் உள்ளக் கருத்துகளை வெளிப்படுத்தும் வாயிற்கருவியாகக் கையாளும் ஒலித்தொகுதியே மொழி. அது பிறப்பதும் வாழ்வதும் மக்கள் வாயே. ஒரு மொழியைப் பேசினால் அது வாழும்; இன்றேல் மாளும்.