பக்கம் எண் :

172தமிழியற் கட்டுரைகள்

     இக் குறள்களும் இவை போன்ற பிறவும், ஒருவன் உலகிற் செம்மையாகவும் சிறப்பாகவும் இன்பமாகவும் வாழச் சிறந்த வழி காட்டுவனவாகும்.
3. திருமறை யாசிரியர்
     திருக்குறள், வீடுபேற்றிற் கின்றியமையாத எல்லாம் வல்ல இறைவன் வழிபாட்டையும், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும், துறவு நெறிக்குரிய அறவொழுக்கங்களையும், நிறைவாகக் கூறி, இன்பத்துப் பாலால் திருக் கோவை போல் உவமை வாயிலாகப் பேரின்பத்தை யுணர்த்தும் திருமறையாகும்.
4. மெய்ப்பொருளறிஞர்
     தன்வயத்தம், தூய்மை, இயற்கை முற்றறிவு, இயல்பாகக் கட்டின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலின்பம், எங்கு முண்மை, பகாமை என்னும் தொண்குணத்தனாய், தனக்குவமையில்லாத முழுமுதற் கடவுள், எல்லாம் வல்லனாதலின், அவனை எழு கூறாகப் பகுக்கும் ஆரிய முறையை மறுத்து, ஐம்பூதமும் ஐம்பூதத் தன்மையும் அறிவுப் பொறி யைந்தும் கருமப்பொறியைந்தும், அவற்றையறியும் ஆதனும் (புருடனும்), அவன் அறிதற் கருவியாகிய மதியுள்ள மனநானுணர்வுகளும் ஆகிய இருபத்தைந்தொடு, காலம் இறைவன் என்னும் இரண்டையுங் கூட்ட, மெய்ய்பொருள் மொத்தம் இருபத்தேழேயெனும் கருத்துப்பட,
  "சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு."

(குறள். 27)

எனத் திருவள்ளுவர் கூறியிருப்பது, அவர் ஒருவரே உண்மையான தெளிந்த மெய்ப்பொருளறிஞர் என்பதைக் காட்டும்.

     ஊழ் என்பது வினையுள் அடங்கும்.

5. செந்தண்மை அந்தணர்.

  "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்?"

(குறள். 251)

  "இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்.

(குறள். 1062)

என்னுங் குறள்கள் உணர்த்தும் ஆசிரியருணர்ச்சியை ஊன்றி நோக்கின்,

  "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்."

(குறள். 30)

என்னுங் குறட்குத் திருவள்ளுவரே சிறந்த எடுத்துக்காட்டெனத் தோன்றுகின்றது.