பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம்175

     எ-கா :
  "இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்."....

(குறள். 1062)

என்னுங் குறள்கள் கூட்டுடைமை பற்றியனவே. இனி,

  "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு."

(குறள். 633)

என்னுங் குறளும் எக் காலத்திற்கும் ஏற்றதே.

9. திருக்குறள் ஒப்புயர்வற்ற நூல்

     ஆரிய வேதத்தையும் பகவற்கீதையையும் மனுதரும சாத்திரத் தையும், பலரும் சிலரும் திருக்குறளுக்கு இணையாகக் கூறுவர். அவர் அறியார்.
     வேதம் பிள்ளைத்தனமான எளிய கருத்துகளுள்ள சிறு தெய்வ வழுத்துத் திரட்டு. திருக்குறளோ, எல்லாம் வல்ல முத்தொழிலிறைவன் வழுத்தொடு கூடிய தலைசிறந்த அறநூல். கட்குடி திருக்குறளில் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இருக்கு வேதத்திற் சோமம் என்னும் கட்சாறோ, 110 மந்திரப் பதிகங்களில் சிறு தெய்வமாக வழுத்தப்பட்டுள்ளது.
     திருக்குறள் பிறப்பாற் சிறப்பில்லை என்பதை வற்புறுத்திக் கூறுகின்றது; பகவற்கீதையோ, மிக நுட்ப வலக்காரமாக, நால்வரணப் பாகுபாட்டை இறைவன் படைத்த பிறவிக்குலமெனக் காட்டுகின்றது.
     மனு தரும சாத்திரம் உலகிற் கடைப்பட்ட அறக்கேடான நஞ்சு நூல். அது பிராமணரைத் தெய்வமாக உயர்த்தியும் சிறந்து வாழவைத்தும், பிறரை விலங்காகத் தாழ்த்தியும் அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் வறுமையிலும் வருந்தவைத்தும், மகிழ்ந்து பெருமை கொள்வது. அதிலுள்ள பொருளாட்சிக் கொள்கைகளும் கருத்துகளும், இறப்ப இழிந்தவை; அறக் கொடியவை.
     எ-கா :
     "சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று கருதுகின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோரால் இகழப்பட்டது. ஏனெனின், இரும்பை முகத்திற் கொண்ட ஏரும் மண்வெட்டியும் நிலத்தையும் நிலத்திலுள்ள பற்பல பூச்சி புழுக்களையும் வெட்டுகின்றன வன்றோ!" (மனுதருமசாத்திரம், 10:84.)
10. திருக்குறள் தமிழ்மறையே
     திருக்குறள் பொதுமறையெனப் பெயர் பெற்றிருப்பினும், அது தமிழரை ஆரிய அடிமைத்தனத்தினின்று மீட்கும் தமிழ்மறையாகவே இயற்றப்பட்டது. தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் தலைசிறந்தி ருந்ததனால், திருவள்ளுவர் நடுநிலையாக இயற்றிய தமிழ்மறை தானாக உலகப் பொதுமறையாயிற்று. அதனாலேயே,