பக்கம் எண் :

176தமிழியற் கட்டுரைகள்

     எ-கா :
  "பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச்-சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்."
  "இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும்
மன்பதைக் கெல்லாம் மனமகிழ - அன்பொழியா
துள்ளி புணர வுரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து."
  "அறந்தகளி ஆன்ற பொருள்திரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு-குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு."
  "பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து."
  "வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து."
என்னும் வள்ளுவமாலைப் பாக்கள் எழுந்தன.
  "வள்ளுவன் தன்னை யுலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்று, பாவலர் சுப்பிரமணிய பாரதியார் பாடியதும் அவ் வகையிலேயே.
  "ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"

(குறள். 656)

என்னுங் குறளுரையில்,
     "இறந்த மூப்பினராய இரு முதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தா யினும் புறந்தருக வென்னும் அறநூற் பொதுவிதி, பொருணூல் வழி யொழுகுதலும் அரசர் தொழிற்குரிய ராதலும் நன்குமதிக்கற் பாடுமுடைய அமைச்சர்க் கெய்தாமைபற்றி, இவ்வாறு கூறினார்." என்று, ஆரிய முறைப்படி உரைகூறும் பரிமேலழகரும் சிறப்புக் குறிப்பு வரைந் திருப்பதால், திருவள்ளுவர், சமையம் வாய்க்கும்போதெல்லாம், ஆரியக் கொள்கையைக் கண்டித்துத் தமிழ் மரபை நாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டவர் என்பது, தெள்ளத் தெளிவாம்.