பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம்177

     பரிமேலழகர் அறநூல் என்றது மனுதரும சாத்திரத்தை. தரும நூலென்று ஆரியர் கூறுவனவெல்லாம் அதரும நூல்களாதலின், அவற்றை அறநூல் என்பது தமிழர்க்கு எதிர்மறைக் குறிப்பாம்.
11. நாற் பொருட் பாகுபாடு
     ஆரியர் சிந்துவெளியில் தங்கியிருந்தபோது, இயற்கைத் தோற்றங் களையும் ஐம்பூதங்களையும் உணவுப் பொருள்களையுமே தெய்வங்களாக வணங்கிவந்தனர். சோமம் என்னும் ஒரு கொடிச் சாற்று மதுவும் தெய்வமாக வணங்கப்பட்டது. விடியற்கால ஒளியை உஷா என்றும், கதிரவன் எழுமுன் அதை ஸவிதா (ஸாவித்ரீ) என்றும், எழுஞ் செங்கதிரவனை அருண என்றும், எழுந்த கதிரவனைச் சூர்ய என்றும், எழுகை உச்சிச் செலவு விழுகை ஆகிய முந்நிலை இயக்கங் கொண்ட கதிரவனை விஷ்ணு என்றும், பின்னர்ப் பன்னிரு மாதம் அல்லது ஓரைபற்றிச் சூரியனைப் பன்னிருவர் ஆதித்தர் என்றும், இங்ஙனம் ஒரே சுடரை அறு தெய்வமாக வணங்கியது, அவரின் மதிவளர்ச்சியில்லா நிலையைக் காட்டும்.
     அவருக்குக் கோயிலுமில்லை; குளமுமில்லை. விலங்கைக் காவு கொடுக்கும் வேள்வித் தூணே கோயில்.
     இறந்தபின் உயிர்கள் கூற்றுவன் உலகத்தையும் கதிரவன் உலகத்தையும் திங்கள் உலகத்தையும், அடையும் என்பதே, அவர் மறுமைக் கொள்கை. கடவுளை அறியாததனால், வீடுபேற்றுக் கருத்தே அவருக் கிருந்ததில்லை.
     தமிழரோ முதல் மாந்தனினத்தாராய்க் கி.மு. ஓரிலக்கம் ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி, கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் வளர்த்து, கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்துறை நாகரிகமும் முத்தமிழிலக்கியமும் முழுமுதற் கடவுள் வணக்கமுங் கண்டவர். அதனால், அறம் பொருளின்பம் வீடென்னும் நாற் பொருட் பேற்றை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர்.
     பொருள்கள் அறிவியல்தொறும் வெவ்வேறு பாகுபாடு கொள்ளும். அறம் பொருளின்பம் வீடென்பது அறநூற் பாகுபாடு; அகம் புறம் என்பது பொருளிலக்கண நூற்பாகுபாடு; பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என்பது, ஏரணநூற் பாகுபாடு; சித்து (செத்து) சடம் (சட்டம்) என்பது கொண்முடிவு (சித்தாந்த) நூற் பாகுபாடு. இங்ஙனமே ஏனையவும்.
     ஒரே அறிவியற்குள்ளும், அவ்வந்நிலைக்கு அல்லது பிரிவுக் கேற்றவாறு பொருட்பாகுபாடு வேறுபடுவதுமுண்டு. இலக்கண நூலுள், எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்றும், சொல்லதி காரத்தில் உயர்திணை அஃறிணையென்றும், பொருளதிகாரத்தில் அகம் புறம் என்றும்,