பக்கம் எண் :

178தமிழியற் கட்டுரைகள்

இனிச் சொல்லதிகாரத்துள்ளும் பெயரியலில் பொருளிடங் காலம் சினை குணம் தொழிலென்றும், வேறுபடல் காண்க.
     அகப் பொருளிலக்கணத்தில், தலைவன், பொருள்வயிற் பிரியுங்காற் கூறும் கூற்றுக்களுள் ஒன்று 'மூன்றன் பகுதி' (தொல். அகத். 41) எனப்படும். அது "அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளாற் காமம் நுகர்வேன்" என்பது. இதனால், அறம் பொருளின்பம் என்னும் பாகுபாடும் அகம்புறம் என்னும் பாகுபாடும் வெவ்வேறென்பதும், இரண்டும் தமிழே யென்பதும் பெறப்படும். இதில் இன்பம் என்றது இம்மைக்குரிய தாதலால், வீடு விடப்பட்டது.
     தமிழரின் உயர்ந்த மதங்கள், சிவமதம் திருமால்மதம் இவ் விரண்டிற்கும் பொதுவான கடவுள் மதம் என மூன்றாம். இவற்றுள் முந்தியது சிவமதம்.
  "பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
"தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே"
  "மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
  "தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"
என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதனாலும்,
     பனிமலைக்கும் குமரிமலைக்கும் இடைநடுப்பட்ட தில்லைச் சிற்றம்பலம் பேருலக நெஞ்சத்தாவாக, "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல்" கொள்ளுமுன்பே, பாண்டிய னால் அமைக்கப்பட்டதனாலும், ஆரியர் சிவநெறியைத் தழுவு முன்பு, வடநாட்டில் திருக்குறி (லிங்க) வழிபாடு செய்து வந்த தமிழரைச் 'சிசின தேவர்' என்று பழித்ததனாலும், உருத்திரன் கடுங்காற்றுத் தெய்வமே யாதலாலும், சிவன் வேதத் தெய்வ மன்மையாலும், சிவமதம் தமிழ மதமே யென்பது வெள்ளிடைமலை. வீடுபேறு இறைவனிடம் பெறுவதேயன்றிச் சிறு தெய்வங்களிடம் பெறுவதன்று. வடபாற் சென்ற தமிழரே திரவிடராகத் திரிந்தும், வடமேற்கிற் சென்ற திரவிடரே ஆரியராக மாறியும் இருப்பதால், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம். ஆதலால், ஆரியரே நாற்பொருட் பாகுபாட்டைத் தமிழர்க் கறிவித்தனரென்பது, பேரன் தன் பாட்டன் திருமணத்திற்குப் பாட்டியற்றினான் என்பது போன்றதே.
12. திறக்குறளைப் பயன்படுத்தல்
     ஒரு கொடிய நோய்க்கு ஒரு மருத்துவர் சிறந்த மருந்து காணின், அதை நோயாளி உண்டாலொழியக் கண்டாலுங் கொண்டாலும் பயனில்லை. அதுபோன்றே, ஆரிய ஏமாற்றினின்று தப்புவதற்குத்