பாடல் தோறும் கணக்கற்ற பாட வேறுபாடுகள் இடம் பெற்றும் நூலின் வடிவமும் வண்ணமும், அமைப்பும் அழகும் கெட்டதற்குக் காரணம், அந்த நூலிற்குப் பழைய உரைகள் தோன்றாமையே ஆகும். மூவாயிரம் பாடல்கள் இருக்க வேண்டிய திருமந்திரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இடைச் செருகல் பாடல்கள் நுழைந்ததற்கும், பல பாடல்கள் மூடுமந்திரமாக இருப்பதற்கும் காரணம், அந்த நூலுக்குப் பழைய உரைகள் இன்மையே ஆகும். பெருங்கதை முதலும் முடிவும் இழந்து விளங்காத அருங்கதையாக இருப்பதற்குக் காரணம், அதற்குப் பழைய உரை ஒன்றும் ஏற்படாமையே ஆகும். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்த தமிழறிஞர் மு. அருணாசலம் உரையாசிரியர்களின் நற்பணியை, “இடைக்காலத்தில் உரைகாரர்கள் தோன்றாமல் போயிருப்பாரானால், பழந்தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் மேலும் பல, கிடைக்காமல் கால வெள்ளத்தில் அழுந்தி இருக்கும்.” என்று போற்றிப் புகழ்கின்றார். உரை ஆய்வுகள் இத்தகைய சிறப்புவாய்ந்த உரைகளைப் பற்றிய ஆய்வின் முதற்கட்டம், இறையனார் களவியலுரையிலிருந்த தொடங்கி, சிவஞான முனிவரின் உரைகளுடன் முடிகின்றது. அதற்கு அடுத்த கட்டம் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அந்த நூற்றாண்டிலிருந்துதான் பழந்தமிழ் நூல்கள் உரைகளுடன் பதிப்பிக்கப் பெற்றன. 1819-ஆம் ஆண்டில் எல்லீஸ் துரை, திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு உரை எழுதி முதன் முறையாக அச்சிட்டுப் புத்தக வடிவில் தந்தார். இதுவே அச்சுவடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் நூலாகும். அதன் பின்னரே தமிழறிஞர்கள் முயன்று, தமிழ் இலக்கண இலக்கியங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டனர். 19-ஆம் நூற்றாண்டில் பழைய உரைகளும் புதிய உரைகளும் மூல நூல்களோடு பதிப்புக்கலையுடன் இணைந்து வெளிவந்தன. உரையும் பதிப்பும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல, சேர்ந்தே வெளிப்பட்டன. ஆதலின் உரைகளைப் பற்றிய ஆய்வு பதிப்புக்கலையுடன் தொடர்புடையதாக உள்ளது. சிறந்த பதிப்பு நூல்களில் உரைகளைப் பற்றிய ஆய்வு, நூலின் முன்னுரையிலும் பக்கங்களின் அடிக்குறிப்பிலும் பிற்சேர்க்கையிலும் இடம் பெற்றது. இவ்வாறு, ஏட்டுச் சுவடியில் |