பக்கம் எண் :

100விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     துராகிருதமாக   நுழைந்த   சத்துருக்களுக்கு  இடமேயன்றி,  அனுபவ
பாத்யத்தையும்  கொடுத்து  தான் ஏமாந்து  நிற்கவும் இடம் உண்டாக்குகிறது!
அந்தோ! காலத்தின் போக்கும் குணத்துக்குச் சம்மானமும் என்னே!

     “அந்தோ!  கோடிக்கணக்கான  பிள்ளைகளைப் பெற்ற தமிழ் மாது தன்
பிள்ளைகளால்  தானறியப்படாமற்  போனதன்றி,  பிற சொற்களைப் பார்த்துத்
தன்  பெயராலே  அழைக்கும்  மதியற்ற  குழந்தைகளைப்  பெற்ற, காலத்தின்
விபரீதம் என்னே! இக்கொடுமையை மாந்தர் சகிப்பாரோ?”

     “எனவே, பணத்துக்கோ, கீர்த்திக்கோ, பாஷாபிமானத்துக்கோ, எதற்கோ
நான்  இதுவரை  உபயோகித்த  கலப்புத் தமிழின்றி,  நமது  வீரத்   தமிழ்ப்
பாஷாபிமானி  கேட்டபடி, ஓர் “தனித்தமிழ்” வியாசம் எல்லா தமிழ் மக்களும்
எழுத  முயலுவார்களாக!  இதைக் கடமையென்று  கொண்டவர் முயலாதிரார்.
“முயற்சி திருவினையாக்கும்.” தமிழ்மாது கருணை புரிவாளாக!”1

     தியாகி  சிவம்  ஆங்கில பக்தர்களைச்  சாடினார். தம் தாய்மொழியை
ஆங்கில  ஆதிக்கத்திலிருந்து  விடுவிக்கும்  ஆர்வத்தினால்  நண்பர்களிலே
சிலரைப்   பகைவர்களாக்கிக்   கொண்டார்.   பத்திரிகைகளின்  ஆதரவால்
விளம்பரம்  பெறவேண்டிய  அரசியல் வாதியாகிய  சிவம், தம் தாய்மொழிப்
பற்று காரணமாக செல்வாக்குமிக்க பத்திராதிபர்களைப் பகைத்துக் கொண்டார்.
‘சுதேசமித்திரனின் ஆங்கில மோகத்தை எதிர்த்து அதனுடன் கருத்துப்போர்
நடத்திய சிவம், ஆங்கில நாளிதழான “இந்து” பத்திரிகையையும் விடவில்லை.

     1915 ஆம் ஆண்டில்-சென்னையில் ஆங்கிலம் படித்த, தமிழில் ஆழ்ந்த
புலமையில்லாத - சிலர்  கூடி, ‘தமிழ்க் கழகம்’ ஒன்று  அமைத்தனர்.  அதன்
சார்பில்  விடப்பட்ட  அறிக்கையை  யொட்டி,  தமது  ‘ஞானபாநு’வில் சிவம்
எழுதிய குறிப்பு வருமாறு:

     “சென்னையில்  சில  ‘பெரிய’  மனிதர்கள்  சேர்ந்து ஒரு தமிழ்க்கழகம்
ஸ்தாபித்திருக்கிறார்களாம்.  தமிழ்ப்   பாஷையை  ஆதரிக்கும்   பொருட்டும்
அபிவிருத்தி  செய்யும்  பொருட்டும் தமிழ்ப்பாஷையில்  பழைய  நூலாசிரியர்
களின்  ஜீவித சரித்திரங்களையும் நூல்களையும்  விரிவாக ஆராய்ச்சி  செய்து
தக்கவியாசம்  எழுதி யனுப்புவோர்கட்கு  இக்கழகத்து அங்கத்தினர்கள் தங்கப்
பதக்கங்கள் அளிக்கத்தயாராக இருக்கிறார்களாம்.


1.’ஞானபாநு’ நவம்பர் 1915.