அன்னை மொழியான கன்னித்தமிழை முறையாகப் பயின்று, அம்மொழியிலே
பெரும் புலமை பெற்றார். கல்வி கற்கும் பருவத்தில் பெற்றோர் விருப்பப்
படியும், பின்னர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலும் தமிழ் பயின்றார்.
பிள்ளைப் பருவத்தில் அவர் பயின்ற தமிழ் இலக்கிய நூற்களின் பட்டியலை
அவரே தருகிறார், படியுங்கள்: அறிவரிச்சுவடி, ஆத்தி சூடி
செறிவுறக் கேட்டுச் சிந்தையுட் கொண்டேன்;
எண்ணின் சுவடி, எழுதும் சட்டம்
கண்ணுறக் கொண்டு கருத்தொடு பழகினேன்.
உலக நீதி ஒழுக்க இயல்பு
பலமுறை கேட்டுப் பண்பொடு பயின்றேன்.
கொன்றைவேந்தன், குழியின் பெருக்கம்,
வெற்றி வேற்கை, வெண்பா மூதுரை
இயற்றிய ஆன்றோர் எண்ணிய பொருளுடன்
பயிற்றிய வண்ணம் பண்புறக் கேட்டேன்.1
ஓட்டப் பிடாரம் உற்றமுற் றினங்களிற்
பாட்டனொடு சென்று பாரத வாசகம்
குணிநல் அல்லிக் குளத்துச் சுப்பிர
மணிய பிள்ளை வாசிக்கக் கேட்டும்,
வீட்டினில் ஒவ்வொரு விடியற் காலையும்
பாட்டி மீனாள் பகர்ந்தநஞ் சொக்கரின்
திருவிளை யாடல் திருக்கதை யனேகம்
ஒருவிளையாடலா வுவந்துட் கொண்டும்,
பாட்டன் இரவினிற் படுக்கையிற் சொல்லிய
தேட்ட மிகுந்திடுஞ் சீருடை இராகவன்
கதையினைக் கேட்டும்,-2
திருவள்ளுவரின் தெய்வமா மறையின்
பெருவளக் குறள்சில பேணிப் படித்தேன்
நந்தாது விளங்கும் நற்சங்க நூல்களுள்
சிந்தா மணியும் சிலப்பதிகாரமும்
மணிமே கலையும் மற்றுஞ் சிலவும்
துணிவோ டெடுத்துத் தொடங்கினேன் முடித்திலேன்3