இவையன்றி, கைவல்யம் - விசாரசாகரம் ஆகிய வேதாந்த நூல்களையும்
தக்காரிடம் பயின்று தத்துவ அறிவையும் பெற்றார். அந்நாளில் பெரும்புகழ்
பெற்ற புலவராக விளங்கிய சோழவந்தான் அரசஞ் சண்முகனாரைத் தமது
இல்லத்தில் வைத்துத் தொல்காப்பியம் என்ற இலக்கண நூலைக் கசடறக்
கற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்து தமிழ் பயின்று 'சங்கப்புலவர்'
என்ற சிறப்பையும் பெற்றார்.
சுருங்கச் சொன்னால், தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிப்புலமையும்;
சங்க இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், புராண -இதிகாசங்கள், நீதி
நூற்கள், வேதாந்த நூல்கள் ஆகியவற்றில் ஞானமும் பெற்று பெருஞ்
சிறப்புடன் விளங்கிய நிலையில்தான் வ.உ.சி. நாற்பதாண்டு சிறைத்தண்டனை
பெற்றார். விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற பெருந்தலைவர்களிலே
வேறெவரும் இத்தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை. திலகர் சகாப்தத்திலுஞ் சரி;
காந்தி சகாப்தத்திலுஞ் சரி; விடுதலைப்போரில் கலந்து சிறைசெல்லத் தமிழ்ப்
புலவர்களிலே அதிகம் பேர் முன்வரவில்லை.ஒரு சிலரே அந்தப் பேற்றினைத்
தமிழ்மொழிக்குத் தேடித் தந்தனர். அவர்களிலே முதல்வர் சிதம்பரனார்.
அன்னார், சிறையில் அடைபட்டிருந்த காலத்திலேயும் தமது தமிழ்ப்
புலமையைப் பெருக்கிக் கொள்வதிலே கவனஞ் செலுத்தினார். இதனை,
வள்ளுவர் மறையும் மாண்புயர் நல்லாப்
பிள்ளை பாரதமும் பெரும்பொருள் நிரம்பிய
பகவற் கீதையும் படித்தேம்.1
என்ற வரிகளால் அறிகிறோம்.