பக்கம் எண் :

106விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     சிறைபுகுந்தும் தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்களிலே சிதம்பரனாரே
முதன்மை பெறுகின்றார். அன்னார் கண்ணனூர்ச்  சிறையில் அடைபட்டிருந்த
போது, 100 வெண்பாக்களால் ' மெய்யறிவு ' என்னும் நீதி நூலை இயற்றினார்.
அந்த நூல் பிறந்த வரலாற்றை அவரே கூறக் கேட்போம்:

     "இராஜநிந்தனைக் குற்றத்திற்காக  யான் நாடு கடத்தல் தீர்ப்புப் பெற்றுக்
கண்ணனூர்ச்   சிறையில்   வசித்தகாலத்தில்   என்   பக்கத்தில்   வசித்துக்
கொண்டிருந்த  மற்றக்  குற்றவாளிகளுக்குப் பல  பாவங்களையும், அவற்றால்
இம்மையிலும் மறுமையிலும் விளையும் கேடுகளையும், அவற்றை நீக்குதற்குரிய
மார்க்கங்களையும்  அடிக்கடி  யான்  எடுத்துக் கூறுவதுண்டு.  ஒருநாள் அக்
குற்றவாளிகளிற்  சிலர் "பல  பாவங்களையும்  தொகுத்துச்  சில பாக்களாகச்
செய்து கொடுத்தால் அவற்றை நாங்கள் மனப்பாடம் செய்து வைத்து அடிக்கடி
நினைத்துக் கொள்வோம்" என்று கூறினர்.

     " அவர் சொற்படி  அன்றிரவு  இந்நூலின் " மறங்களைதல் " என்னும்
அதிகாரத்திலுள்ள பத்து  வெண்பாக்களையும் பாடி மறுநாள் அவர்களுக்குச்
சொன்னேன். அவற்றை அவர்கள் மனப்பாடம்  செய்த பின்னர் அவர்களது
விருப்பப்படியே இந்நூலின் "அறம் புரிதல்" என்னும் அதிகாரத்திலுள்ள பத்து
வெண்பாக்களையும்  பாடி, மறுநாள்  அவர்களுக்குச்  சொன்னேன். பின்னர்,
இவ்விருபது  வெண்பாக்களையும்   இரண்டு அதிகாரங்களாக்கி  அவற்றிற்கு
முன்னும்  பின்னும்  சில  அதிகாரங்களையுச்  சேர்த்து,  மொத்தம்   நூறு
வெண்பாக்களாக்கி, அவற்றை "மெய்யறிவு" என்னும் பெயருள்ள  இந்நூலாக
உருப்படுத்தினேன்."1

      "மெய்யறம்" என்னும்  மற்றொரு நீதி  நூலையும் கண்ணனூர்ச் சிறை
வாசத்தின் போதே கவிதை வடிவில் படைத்தார் வ.உ.சி.

     நாற்பதாண்டுச்  சிறைத்தண்டனைபெற்று,  சிறையிலே  செக்கிழுத்தும்
கல்லுடைத்தும்  சிந்தை  நொந்த   நேரத்திலும் ,  மறவோரான  கிரிமினல்
கைதிகளையும் அறவோராக்க வ.உ.சி.  முயன்றாரென்றால், சமுதாயத்தினை
ஒழுக்கப் பாதையிலே நடத்திச் செல்வதில் அவருக்கிருந்த உறுதிப்பாட்டினை
என்னென்பது!


1. "மெய்யறிவு"-பாயிரம்