பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 107

     தம்முடைய  முதல்  மனைவியார் வள்ளியம்மையார் காலஞ்சென்ற பின்,
" வள்ளியம்மை  சரித்திரம் "  என்னும்   பெயரால்  அவரது  வரலாற்றினை
வெளியிட்டார் . இது ,  வெண்பாக்களாலான  நூல் . தமிழகத்துத்   தேசியத்
தலைவர்களிலே ,  தமது  மனைவியாரின் வரலாற்றை நூலாக்கிய , அதையும்
கவிதை  வடிவிலாக்கிய   தலைவர்  வ.உ.சி.   ஒருவரே  யாவார் .  என்ன
காரணத்தாலோ ,  இந்நூலைத்  தமது  பெயரால்  வெளியிடாமல் வள்ளியம்
மையாரின்   சகோதரரரும்  தமது  மைத்துனருமான  முடிமன்   முத்துசாமி
அவர்கள் பெயரால்  வெளியிட்டுள்ளார் .  ஆனால்,  தமது  சுயசரிதையிலே,
தாமே இயற்றியதாகக் கூறுகின்றார். இந்நூல் சிதம்பரனார் சிறை   புகுமுன்பே
இயற்றப்பட்டதாகும்.

     சிதம்பரனார் ,  தமது  தண்டனைக்  காலம் முடிந்த  பின்னர் 1919 ல்
விடுதலையானார்  .  சிறையைவிட்டு    வெளியே    வந்ததும் ,  நெல்லை
மாவட்டத்திற்குள்  அவர்  நுழையக்  கூடாதென்று   அரசு  தடைவிதித்தது.
இராசத்துவேஷி  என்று  காரணங்காட்டி ,  அவரது  வக்கீல் சன்னத்தையும்
பறித்துவிட்டது .  இதனால்,  நீதிமன்றத்திலே  தொழில்புரிய மாட்டாதவராய்,
சென்னை   நகரிலே  சில ஆண்டுகள் தங்கி வாழ்ந்தார் அப்போது தமக்குக்
கிடைத்த ஓய்வு  காரணமாக , திரு.வி. கலியாணசுந்தரனார்,  டாக்டர் உ.வே.
சாமிநாதய்யர்,  பெரம்பூர் எம்.ஆர்.சண்முகம் பிள்ளை பி.ஏ.1 ஆகிய பெரும்
புலவர்களின்  தோழமையைப்  பெற்றார் . சென்னையில் சில ஆண்டுகளைக்
கழித்தபின்,அரசினர் தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டு, திரும்பவும் நெல்லை
மாவட்டம் சென்றார். சில  ஆண்டுகள் கோயில்பட்டியில் தங்கி வாழ்ந்தபின்,
மறுபடியும்   தூத்துக்குடியை  உறைவிடமாகக்  கொண்டார்.   காங்கிரசுடன்
கொண்ட கருத்து வேற்றுமை காரணமாக 1920ல் அரசியலிலிருந்து அடியோடு விலகினார். ஆனால், தமிழ்த் தொண்டிலிருந்து அவர் விலகவில்லை.

உரையாசிரியர் வ.உ.சி.

     திருக்குறளுக்கு    விருத்தியுரை   யெழுதி ,  திருச்செந்தூர்   முருகப்
பெருமான்   கோயில்   மண்டபத்தில்   புலவர்    பெருமக்கள்    பலரைக்
கூட்டிவைத்து,   அவர்கள்   முன்னிலையில்  அதனை     அரங்கேற்றினார்.
திருக்குறள்     முப்பால்களுக்கும்      உரையெழுதினாரெனினும்,    அறத்


1. இந்நூலாசிரியரின்தாய்மாமன்