பயமுறுத்தப்பட்டது . சமூக சம்பந்தமான நாடக இலக்கியங்கள் தமிழில் தோன்றாததற்கு இந்தச் சூழ்நிலையும் ஒரு காரணமாகும். 'வேத்தியல்' - 'பொதுவியல்' என்னும் பெயர்களால் மன்னர்கள் அவையிலேயும் மக்கள் அவையிலேயும் ஆடப்பட்ட நடனம் கூட, கோயிலுக்குள்ளே குடியேற்றப்பட்டது . இதனால், முத்தமிழில் ஒன்றாகிய நடனம் தமிழினத்தவரில் அகச்சமயத்தவருக்கே உரிமையாக்கப்பட்டது. தமிழிலே, 'அகப்பொருள் துறை' என்பது ஒரு தனிச்செல்வமாகும். சங்ககால இலக்கியங்களிலே சரிபாதி அகப்பொருள் பற்றியவையென்றால், அது மிகையாகாது. புலவர்களிலே துறவறத்தாராயினும் இல்லறத்தாராயினும் அகப்பொருள் இலக்கியச் சுவையை வெறுத்தவரிலர் . ஆனால் , தமிழ் மொழியை அகச்சமய எல்லைக்குள்ளே சிறைப்படுத்திய காலத்திலே, பழைய அகப்பொருள் இலக்கியம் போற்றுவாரற்றுப் போய்விட்டது. தலைவன் - தலைவி காதல் பற்றிய ஐந்திணை நெறியை - அகப்பொருள் துறையைப் பண்டைத் தமிழர் மரபுவழி நின்று பாடுவது மத வழிப்பட்ட வைதிகர்களுக்கு இயலாததாக இருந்தது . அதனால், தமிழ் இலக்கண மரபுக்குச் சிறிதளவு மாறுபட்டு, பரமான்மாவைத் தலைவனாகவும் ஜீவான் மாவைத் தலைவியாகவும் பாவித்துக் 'களவியல்' பாடி ஆறுதலடைந்தனர். எப்படியோ ஆன்மிகங் கலந்த அகப்பொருள் இலக்கியங்கள் சைவ சமயத் துறவிகளாலும் படைக்கப்பட்டன வென்றாலும் , அரசியல் கலந்த புறப் பொருள் இலக்கியம் படைப்போர் தோன்றாதொழிந்தனர். ஆம் ; அறம் - பொருள் - இன்பம் - வீடு என்னும் புருஷார்த்தம் நான்கனுள், இடைக்கால - பிற்காலப் புலவர்கள் 'அறம்' பாடினர். 'இன்பம்' ( பரமான்மா , ஜீவான்மா தொடர்பாக ) பாடினர் ; 'வீடு' பேறும் பாடினர்; ஆனால், அரசியல் -அமைச்சியல் கலந்த பொருள் நெறியைப் பாடுவாரிலர். தமிழ் மொழிக்கிருந்த இந்த அடிமைச் சூழ்நிலை , பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக விடுதலைப்போர் ஆரம்பமான போதுதான் மாறத் தொடங்கியது. இந்திய விடுதலைப்போர் நடந்தில்லையானால், அந்தப் போரில் ஈடுபட்ட தேசியவாதிகள் தமிழின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டில்லையானால், தமிழ்மொழி சமயவேலியைக் கடந்த சமுதாயப் பெருவெளிக்கு வந்திருக்காது. விடுதலைப் போர் வரலாறு பல சகாப்தங்களைக் கொண்டதாகும். அதிலே முதலாவதான மன்னர்கள் சகாப்தத்தை ஆராய்வோம். |