பக்கம் எண் :

12விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

                மன்னர்கள் சகாப்தம்

     பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக நடைபெற்ற இந்திய   விடுதலைப் போர்
வரலாறு பல்வேறு கட்டங்களாக அமைந்ததாகும் .அவற்றுள்   முதல் கட்டம்
தெற்கே  நடந்த பாளையக்காரர் போராகும் . இந்தியாவின்   தென்கோடியில்
திருநெல்வேலிச் சீமையிலே பாளையக்காரர்கள்  கிழக்கிந்தியக்  கம்பெனியின்
ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர்.   அவர்களிலே முதல்வனாக - முன்னோடிப்    பாளையக்காரனாக    விளங்கினான்     பாஞ்சாலக்குறிச்சி
வீரபாண்டியக்  கட்டபொம்மன் . அவனுக்குப்  பின்,    அவனுடைய  தம்பி
ஊமைத்துரை , சிவகங்கை  மருது  சகோதரர்  ஆகியோர்   வீரபாண்டியன்
துவக்கி  வைத்த போரைத்  தொடர்ந்து நடத்தினர் . இந்தப்   போர் நடந்த
காலக்கட்டம்  1792க்கும்  1801க்கும் இடைப்பட்டதாகும் .   இதே  காலத்தில்,
மைசூரிலே  ஆட்சிபுரிந்த  வீரன் திப்பு சுல்தான்    கிழக்கிந்தியக் கம்பெனி
வெள்ளையரை எதிர்த்துப் போர்புரிந்து வீர மரணமடைந்தான்.

     இந்திய விடுதலைப்போரின் இரண்டாவது கட்டம் வடக்கே நடைபெற்ற
சிப்பாய்ப்  புரட்சியாகும் . வீரபாண்டியக்  கட்டபொம்மன்  துவக்கி வைத்த
விடுதலைப்போரின் முதல்கட்டத்திலே வடபாரதம் கலக்கவில்லை;அமைதியாக
இருந்தது. ஆம் ; ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வடக்கிலே எதுவுமே
நிகழவில்லை. அதுபோல, வடக்கே சிப்பாய்ப்  புரட்சி நடைபெற்ற 1857 ஆம்
ஆண்டிலே, தென் பாரதத்திலே - குறிப்பாக, தமிழ் வழங்கும்  மாநிலத்திலே
அமைதி நிலவியது. இப்படி, இரண்டு கட்டங்களில் விடுதலைப் புரட்சி நடந்த
காலத்தை "மன்னர்கள் சகாப்தம்" என்று அழைக்கலாம்.

     விடுதலைப்போரின்  மூன்றாவது கட்டம்போலத் தோன்றுவது 1885ஆம்
ஆண்டு  முதல்  1905 ஆம் ஆண்டுவரை-அதாவது, சுமார்   இருபதாண்டுக்
காலம்  காங்கிரஸ்  மகாசபை தலைமையின் கீழ் நடைபெற்ற உயர்தரக் கல்வி
கற்றவர்களின்  உத்தியோகக்  கிளர்ச்சியாகும் . இதனை, "அரச  விசுவாசிகள்
சகாப்தம்" என்று அழைக்கலாம்.

     இந்திய விடுதலைப்போரின் நான்காவது  கட்டம்  தேசிய காங்கிரசின் -
அதன் ஒப்பற்ற  தளபதியாகத் திகழ்ந்த லோகமான்ய திலகரின் தலைமையின்
கீழ் நடைபெற்ற அப்பட்டமான அரசியல் விடுதலைக் கிளர்ச்சியாகும் .இந்தக்
காலத்தைத் "திலகர் சகாப்தம்" என்று அழைக்கலாம்.