இலக்கிய உலகிலே நீண்ட நெடுங்காலமாக ஒரு சிக்கல் இருந்து
வருகின்றது. அது, வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றுவிட்ட அரசர்களையும்
புலவர்களையும் ஒருமைப் பிரயோகத்தால் குறிப்பிடுவது பற்றியதாகும்.
இதனை ஏற்போருமுண்டு; எதிர்ப்போருமுண்டு. ஐயரவர்கள் இதனை
ஏற்பதுடன், இதுதான் சரியென்பதற்குச் சான்றுகள் காட்டிச் சமாதானம்
கூறியிருக்கிறார்.
"கம்பன், வால்மீகி முதலிய மகனீயர் விஷயத்தில் நாம் ஒருமையைப்
பிரயோகிக்கிறோம் என்று சிலர் நம்மீது குறை கூறுகின்றனர்.
"குறை கூறுபவர்களுக்கு இம்மகான்களிடத்து எவ்வளவு பக்தியும்
மதிப்பும் எள்ளளவும் குறைந்ததில்லை என்று கூறுவோம். இவ்வுலகத்தை வெகு
காலத்துக்கு முன் நீத்த அனைவரையும் ஒரே ரீதியாக ஒருமைப் பிரயோகம்
செய்து குறித்தல் தவறாகாது, அவமதிப்பும் ஆகாது என்பது எமது அபிப்
பிராயம். செய்யுள் நூல்களில் ஒருமைப் பிரயோகமாகிறது அவமதிப்பாகாத
போது, வசன நூல்களில் பிரயோகமாவது மாத்திரம் எவ்வாறு அவமதிப்பாகும்
என்று நாம் கேட்கிறோம். இப்பிரயோகத்தை வழக்கத்திற்குக் கொண்டுவர
முயலுகிற நம்முடைய காதுக்குக்கூட இவ்வொருமைப் பிரயோகம் இன்னும்
பழகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் அனுமார், இராமர்,
லட்சுமணர் என்கிற பிரயோகங்கள் பேச்சிலும் இலக்கியத்திலும் புகுந்து
விரசப்படுவதை எம்மால் முடிந்த அளவுக்கு நிறுத்துவதற்கு இதைத் தவிர
வேறு வழியில்லை என்று நினைத்தும், கவிகள் ஆசிரியர் முதலியோருக்கு
மரியாதையையும் மதிப்பையும் காட்டும் வழி அவர்களுடைய நூல்களை
ஆராய்ந்து பார்த்து அவர்களுடைய நூல்களையும் சீர்தூக்கி, அவர்களுக்கு
உரிய ஸ்தானத்தை நிர்ணயித்து வைத்தலும்தான் என்றும், இப்பிரயோகம்
நாளாவட்டத்தில் காதுக்கும் பழகிப்போய் விடும் என்றுமேதான் சில
அன்பருக்குத் தற்போது விருசியாகக் காணப்படுமானாலும் இவ்வாறு
பிரயோகிக்கத் துணிந்தோம்."1
1. "பாலபாரதி", நவம்பர், 1924