காந்தி சகாப்தம்
விடுதலைப்போரின் நடுவே திலகர் தலைமை மறைந்து காந்தியடிகள்
தலைமை தோன்றியதானது இந்தியாவின் அரசியல் வரலாற்றிலே மகத்தான
தொரு மாறுதலாகும். காந்தி சகாப்தத்தில் புகுமுன்பு, திலகரின் அரசியல்
போக்கைத் தருக்கமாகவேனும் புரிந்துகொள்வது அவசியமாகும். திலகர்
பெருமான், 1885ல் காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு முன்பே பொது
வாழ்வில் ஈடுபட்டார். ஏகாதிபத்தியத்தின் எதிரியாகவே பொதுவாழ்வில்
புகுந்தார். 1885ல் முதல் முதலாகக் காங்கிரஸ் மகாசபை பம்பாயில் கூடிய
போது, அதில் கலந்துகொண்டார். அன்றைய காங்கிரஸ் பெருந்தலைவர்களிலே
பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு இரையான முதல் தலைவர்
திலகரேயாவார். 1897ல் பலாத்காரத்துக்குத் தூபமிட்டு, தமது ' கேசரி '
பத்திரிகையில் எழுதினார் என்று அவர்மீது குற்றஞ்சாட்டி, பதினெட்டு மாத
கடுங்காவல் தண்டனை விதித்தது அரசு.
1908ல் இரு பிரிட்டிஷ் பெண்மணிகள் மீது குண்டுவீசிக்கொன்ற தேசபக்த
இளைஞனைப் பாராட்டி எழுதியதற்காகத் திலகர் ஆறாண்டு கடுங்காவல்
தண்டனை பெற்றார். திட்டமிட்ட ஆயுதப் புரட்சியை விரும்பியவரல்லர்
என்றாலும், அகிம்சையை மதமாகக் கொண்டவரு மல்லர். " பகைவன்
எதிர்ப்பட்டால், கிடைத்ததை எடுத்து அடி" என்ற பழமொழியின்படி அவர்
செயல்பட்டார். அதனால், படித்த இளைஞர்களிலே பலர் வன்முறைச்
செயல்களில் மறைமுகமாக ஈடுபட ஊக்கம் பெற்றனர். வங்கத்திலும்
மகாராஷ்டிரத்திலும் ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டு வந்தனர்.
இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ஆள் தூக்கிச்சட்டம், ரௌலட் சட்டம்
போன்ற கொடிய சட்டங்களைப் பிறப்பித்து தேசபக்தர்களை அடியோடு
ஒழித்துக்கட்ட முயன்றது ஆங்கிலேயர் ஆதிக்கம். இந்தப் பின்னணியில்தான்
பஞ்சாபிலே ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்தியது. நாடு
முழுவதையும் பயங்கர இருள் கவ்வியது, அந்த இருளைக் கிழித்து
ஒளியூட்டும் கதிரவனாகத் தோன்றினார் காந்தியடிகள்.