என்று பிரதேச உணர்ச்சிக்குத் தூபமிட்டுப் பாடினார்.
' வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் ' என்று தமிழையும்
தமிழினத்தையும் வாழ்த்திய பின்னர் ' வாழிய பாரத மணித்திரு நாடு' என்று
பாடினார். இன்னும் ஒரு படி மேலே போய் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்
மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் பாடினார்.
திலகர் சகாப்தம் முடிந்து காந்தி சகாப்தம் தோன்றிய ஆரம்ப
ஆண்டுகளிலே சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், திரு.வி.கலியாண சுந்தரனார்,
ராஜாஜி போன்ற தமிழகத்துத் தலைவர்கள் தமிழரிடையே தாய்மொழிப்
பற்றுதலை ஊக்குவிக்கும் வகையில் எழுதியும் பேசியும் தொண்டு புரிந்தனர்.
பிரதேச மொழியை, விடுதலைப் போருக்கான வலிமைமிக்க கருவியாக
மட்டுமல்லாமல், அந்தந்தப் பிரதேசங்களில் வாழும் சாதிகளிடையே -
மதங்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் சாதனமாகவும் தேசபக்தர்கள்
பயன்படுத்தினர். ' இந்திய தேசிய ஒருமைப்பாடு ' என்பது, பிரதேச மக்களின்
ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட வேண்டும்
என்பதனை அன்றைய தேசியவாதிகள் மிகவும் தெளிவாகத் தெரிந்து
வைத்திருந்தனர். அந்தத் தெளிவான பார்வையைத் தேசியவாதிகளுக்குத்
தந்தவர் காந்தியடிகளேயாவார்.
இந்திய சமுதாயத்தை அங்கங்களற்ற ஒரே பிண்டமாக
ஆண்டவன் படைக்கவில்லை. இறைவன் படைப்பிலே இந்து, இஸ்லாம்,