பக்கம் எண் :

140விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

காங்கிரஸ்  கமிட்டி இயங்கி வந்தது. அதனை மொழிவாரித் திருத்தி அமைக்க
முயன்றபோது,  எல்லைச்சிக்கல்  ஏற்பட்டது.  திருப்பதிக்குத்   தெற்கேயுள்ள
தமிழ்ப்  பகுதிகளைத்  தமிழ்நாடு காங்கிரசில் சேர்ப்பதா, ஆந்திர காங்கிரசில்
சேர்ப்பதா ? -  என்ற  சிக்கல்  எழுந்தது.  அந்தப்  பகுதிகள்   தெலுங்குப்
பிரதேசமாகக்  கருதப்பட்ட  சித்தூர் மாவட்டத்தில் இருந்தன. இந்த எல்லைத்
தகராறுபற்றி ஆய்ந்து அறிக்கை தர ஓர் தனிக்குழு நியமிக்கப்பெற்றது. அந்தக்
குழுவிலே தமிழகத்தின் சார்பில் சத்தியமூர்த்தி ஐயர் அங்கம் வகித்தார்.

      தலைவர்  சத்தியமூர்த்தி  திருத்தணி, திருப்பதி, சித்தூர் ஆகிய மூன்று
தாலுக்காக்களையும்  தமிழ்நாடு  காங்கிரசின்  நிர்வாகத்தில்   வைக்கவேண்டு
மென்று  கோரினார். ஆனால், ஆந்திர  காங்கிரஸ் தலைவர்களோடு கருத்துப்
போர்   ஏற்படும்   என்ற   அச்சத்தால்   மற்ற   காங்கிரஸ்   பிரமுகர்கள்
திரு.சத்தியமூர்த்தியின்  கோரிக்கைக்கு  ஆதரவு   காட்டவில்லை.   மாவட்ட
அடிப்படையில்    காங்கிரஸ்    மாநிலங்களின்   எல்லையை   அமைத்துக்
கொள்ளலாமென்றும்,    பிற்காலத்தில்   ராஜ்யங்கள்   மொழிவாரி  திருத்தி
அமைக்கப்படும்போது தாலுக்கா  ரீதியில் எல்லைகளை  மாற்றி  அமைக்கலா
மென்றும் கூறி,  தணிகை -  திருப்பதி -  சித்தூர் தாலுக்காக்களை ஆந்திரக்
காங்கிரசிலே  இணைத்து  விடுவதற்கு   ஆதரவளித்தார்.   இதனால்,  தமிழ்
வளர்க்கப் பாடுபட்ட விடுதலைப் பாசறை வீரர்களோ, தமிழக வடக்கெல்லைப்
பகுதி  மக்களை,  தங்கள்  தாய்மொழிக்குப் புறம் பானவர்களாக்கி, தெலுங்கு
மொழியின் ஆதிக்கத்திலே விட்டுவிட்டனர்.

'காந்தியம்!'

     1924 டிசம்பர்  26ல்,  39ஆவது  காங்கிரஸ்  மகாசபை  வடக்கிலுள்ள
பெல்காம்  நகரில் கூடியது. காந்தியடிகள் அந்த மகா சபையின் தலைமையை
ஏற்றார்.  அவர் தமது  தலைமையுரையிலே மொழி சம்பந்தப் பட்ட கீழ்வரும்
கருத்துக்களை ஐயத்திற்கிடமின்றி அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார்.

     மாநில அரசுகளை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க வேண்டும்.
திருத்தி   அமைக்கப்பட்ட   மாநிலங்கள்   பூரண   சுயாட்சியுடையவையாக
இருக்கவேண்டும்.

     அந்தந்த  மாநில  மொழியிலேயே  அதனதன்  சட்டமன்றம் நடைபெற
வேண்டும்.