அப்படியே மேல் வகுப்பு அரசியல் கைதிகளுக்கு வழங்கினர் சிறை அதிகாரிகள். ஆனால், பிரதேச மொழிப்பத்திரிகைகள், அவற்றிலுள்ள அரசியல் செய்திகள் மீது மை பூசி மறைக்கப்பட்ட நிலையிலே 'சி' வகுப்பு அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. அரசியல் கைதிகளுக்குச் சிறையில் படிக்க நூல்களை அனுமதிப்பதிலேயும் ஆங்கிலம் படித்தவர்களுக்கு ஒரு நீதி; தாய்மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கு ஒரு நீதி என்ற நிலை இருந்தது. ஆங்கில மொழியிலே எழுதப்பட்ட அரசியல் நூல்கள் அனுமதிக்கப்பட்டன. தாய்மொழியிலே இயற்றபெற்ற அரசியல் நூல்கள் கண்டிப்பாக மறுக்கப்பட்டன. தமிழ்மொழியில் நடத்தப்படும் நாடகங்களிலே அரசியல் மணங் கலந்தாலே அபாயம் என்ற நிலை இருந்தது. பல நாடகங்கள் அரசினரின் தடைக்குள்ளாயின. நடிகர் சிலர் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களிலே, தெருக்கூத்து நடிகர்களே அதிகமாவர். பிரதேச மொழிக் கவிஞர்களையும் விடவில்லை பிரிட்டிஷ் ஆட்சி. விடுதலைப் போர் வரலாற்றை ஆராய்ந்தால், பிரதேச மொழியிலே ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரசாரம் செய்யத் தொடங்கிய பின்னர்தான், நாட்டு மக்கள் விழித்தெழுந்தனர் என்பது புலப்படும். தமிழகத்திலே, தமிழில் பேசி - தமிழில் எழுதி - தமிழ் மொழியிலே விடுதலைப் பாசறையின் நடவடிக்கைகளை நடத்தத்தொடங்கிய பின்னரே, ஆங்கிலப் பேரரசு அஞ்சியது. அடக்குமுறையில் ஈடுபட்டது. அந்த அடக்கு முறைக்குத் தமிழ் மொழி அஞ்சியதா? தமிழர் அஞ்சினரா? இல்லை, இல்லை. அரசு ஒடுக்க ஒடுக்க, பலப் பல பெயர்களிலே புற்றீசல் போல நாளிதழ்களும் வார இதழ்களும் மாத இதழ்களும் தோன்றின. பொதுவாக, ஆங்கில அரசின் அடக்குமுறைக் கொடுமைகளுக்கு இரையான மிகப் பெரும்பாலோர் பிரதேச மொழியைப் பிரசாரக்கருவியாகப் பயன்படுத்தியவர்களேயாவர். "பிரதேச மொழியிலே அரசியல் பிரசாரம் செய்யக்கூடாது" என்று அரசு தடைவிதிக்கவில்லை. காரணம், அப்படி ஒரு தடையுத்தரவை அது பிறப்பித்திருந்தால், அவ்வுத்தரவு பிறந்த 24 மணிநேரத்தில் பிரிட்டிஷ் பேரரசு அழிக்கப்பட்டிருக்கும். ஆம்; நாட்டுப் பற்றினும் வலிமையுடையது தாய் மொழிப் பற்று. அதனாற்றான், தமிழ் மொழிக்கே தடை விதிக்க அஞ்சி, அம்மொழியில் பேசியவர்களையும் எழுதியவர்களையும் |