பாடியவர்களையும் நாடகம் நடத்தியவர்களையும் துன்புறுத்தியது ஆட்சி. "ஆங்கில மொழி பயின்றதால்தான் சுதந்தர உணர்வு பெற்றோம்" என்று பட்டதாரிகளில் சிலர் கதைக்கின்றனர். அவர்கள், மேலே தந்துள்ள வரலாற்று உண்மைகளை நினைவில் கொண்டால், தேசபக்தியை வளர்த்தவை பிரதேச மொழிகளே என்பதனை உணர்வார்கள். 1897ல் பிரதேச மொழிப் பத்திரிகைகள் வாய்ப்பூட்டுச் சட்டமொன்றைப் பிறப்பித்தார் வைசிராய். இது ஒன்றே, பிரதேசமொழிதான் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போரில் அன்னிய ஆட்சியை அச்சுறுத்தும் வலிமைமிக்க கருவியாக இருந்தது என்பதனை உணர்த்தும். வீரமூட்டும் பாடல்கள் விடுதலைப் போர்க்களத்திலே பாமர மக்களுக்கு உணர்ச்சியூட்ட இசைத்தமிழே அதிகம் பயன்பட்டதெனலாம். கவர்ச்சிகரமான சந்தங்களிலே, வீரமூட்டும் கருத்துக்களை வெளியிடும் பாடல்களை இயற்றினர் தேசிய பாவலர்கள். விடுதலைப் போர்க்களத்திலே இருபெரும் கவிஞர்கள் தோன்றினர். ஒருவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. முன்னவர், திலகர் சகாப்தத்தைச் சார்ந்தவர். பின்னவர், காந்தி சகாப்தத்தைச் சார்ந்தவர். இந்த இருவருமே தமிழ் மொழிப்பற்றை, தமிழினஉணர்வை வளர்க்கப் பணிபுரிந்தனர். "நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று பகையாகாதென்ற உண்மையை உணர்ந்து, நாட்டுப்பற்றைக் கொண்டு மொழிப்பற்றையும், மொழிப்பற்றைக் கொண்டு நாட்டுப்பற்றையும் நன்கு வளர்த்தனர். பாரதியார், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று இறுமாந்து பாடினார். "இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை" என்றும் உறுதி கூறினார். பெயரளவில் மட்டும் தமிழராக வாழாமல், தமிழை மறவாத தமிழராக வாழ்ந்து, சேமமுற வேண்டுமெனில், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்" என்கிறார். ஆம்; தமிழர் வாழ்விலே, தமிழ்நாட்டிலே 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்ற நிலை தோன்றவேண்டும் என்றார். |