பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 153

காட்சியைக்  கண்ட  கோழைகளும்  வீரர்களாயினர் என்றால், பாரதி பாடிய
பண்டாரப் பாட்டின் சிறப்பை என்னென்று சொல்வது!

     அந்தப்  பண்டாரப்  பாட்டின் சந்தத்தையே பின்பற்றி, போர் வீரர்கள்
பாடுவதற்கென்றே  பாசறைப்  பாடலொன்றைப்  பாடினார் நாமக்கல் கவிஞர்.
அது,  "கத்தியின்றி,   ரத்தமின்றி,   யுத்தமொன்று   வருகுது;  சத்தியத்தின்
நித்தியத்தை  நம்பும்  யாரும்  சேருவீர்"  என்ற பாடலாகும். இந்தப் பாடல்
1930ல் உப்புசத்தியாகிரகம்  தோன்றிய காலத்தில் பாடியதாகும். பாரதியாரின்
"அச்சமில்லை"  என்ற   பாடலைவிட,  நாமக்கல்  கவிஞரின்  "கத்தியின்றி
ரத்தமின்றி" என்ற  பாடல் அதிக  மதிப்பு பெற்றது  விடுதலை  வீரர்களின்
பாசறையிலே!

     போராட்ட   காலங்களிலே,  முன்னிரவு  நேரத்திலே,  தனித்தனியே
இருட்சிறையில்   அடைபட்டுக்   கிடந்த  அரசியல்  கைதிகள்  உணர்ச்சி
பொங்கத்  தேசியப்பாடல்களைப்  பாடுவார்கள்.  ஆகா! அந்தக் காட்சியை
எப்படி  வருணிப்பது?  ஒரு  கைதி   பாரதியாரின்  "அச்சமில்லை" என்ற
பாட்டை   அச்சமற்ற   குரலில்  பாடுவார்!   மற்றொரு   கைதி, நாமக்கல்
கவிஞரின்  "கத்தியின்றி  ரத்தமின்றி"  பாடுவார்.  வேறொரு கைதி, யாரோ
பாடிய  "சிறையில் புகுந்த மனமே"  என்ற  பாடலைப் பாடி, தன் மனதுக்கு
ஆறுதல்  கூறுவார். வேறொரு  கைதி, "போலீஸ் புலிக்கூட்டம்  - நம்மேல்,
போட்டு வருகுது பார் கண்ணோட்டம்"  என்று  அந்நாளில்  தேசபக்தர்கள்
போலீசாரிடம்   பட்ட   துன்பங்களை   வருணிக்கும்    பாடலைப்  பாடி
ஆறுதலடைவார். 

சிறையெலாம் நாத மயம்!

     அன்றைய சென்னை ராஜ்யம் தமிழ்-தெலுங்கு-மலையாளம்-கன்னடம்
ஆகிய  நான்கு  மொழிப் பிரதேசங்களைக் கொண்டதாதலால், தமிழகத்துச்
சிறைகளிலே ஆந்திரர்களும் ஆந்திரச்  சிறைச்சாலைகளிலே  தமிழர்களும்
அடைக்கப்படுவது    வழக்கம்.   அதனால்,  தமிழகத்துச்   சிறைகளிலே
தமிழ்ப்பாடல்கள்  முழங்கும் அதே  நேரத்தில் ஆந்திர விடுதலைவீரர்கள்
தெலுங்குப் பாடல்கள் பாடுவர்.  அவற்றில் ஒன்று "மாக்கொத்து  ஈதெல்ல
தொரத்தனமு"  என்ற  பாடல்.  இதன்பொருள்,   "எங்களுக்கு வேண்டாம்
இந்த வெள்ளைக்காரர் ஆதிக்கம்" என்பதாகும்.