பக்கம் எண் :

154விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     சிறைச்சாலையிலே, தனித்தனியே 'பிளாக்கு'கள் இருக்கும். ஒவ்வொரு
'பிளாக்கிலும்  சுமார் 40 அல்லது 50  அறைகள்  இருக்கும். அறைக்கொரு
அரசியல் கைதி அடைக்கப்பட்டிருப்பார். அநேகமாக ஒவ்வொரு கைதியும்-
ராகம்,  தாளம்  பற்றிக்  கவலைப்படாமல் - இரவு  9 -மணிவரை பாடுவர்.
சிறைச்சாலை முழுவதுமே  நாதமயமாகி விடும்!  அவ்வளவுபேர் குரல்களும்
ஒரே  குரலாகுங்கால்,  தேசபக்தியோடு   தாய்மொழிப்   பக்தியுங் கலந்து,
சிறைச்சாலையிலே  தாய்நாடும்  தாய்மொழியும்  தெய்வ  வடிவம் பெற்றுக்
கூத்தாடுவது   போன்ற   காட்சி  அகக்கண்களுக்குத்  தோன்றும்!   ஆம்;
அவ்வளவு   தெய்வீகக்காட்சி   அது!   அந்தக்  காட்சி    சிறைதோறும்-
நாள்தோறும் நிகழும்!  அதனை  நினைக்கும்போதெல்லாம் நாம் சுதந்திரம்
பெற்றுள்ள    இந்நாளைவிட,    அடிமையை     யொழிக்கப்   போராடி,
சிறைச்சாலையிலே   அடைபட்டுக்  கிடந்த    அந்நாளே   நன்னாளாகத்
தோன்றும்!

     அன்னிய  அரசு,  அரசியலோடு  கலந்து  தமிழ்மொழி  பெற்ற புது
வாழ்வை  அழித்தொழிக்க  முயன்றதால்,  அந்த அடக்குமுறை எண்ணற்ற
கவிஞர்களைத்   தோற்றுவித்தது.  அவர்களிலே,  யாப்பிலக்கணங் கற்றுப்
பாடியவர்களுமுண்டு. இலக்கண ஞானமின்றி, வெறும் தேசபக்தி காரணமாக,
இதய   எழுச்சியால்  இலக்கணப்   பிழைகளோடு   பாடியவர்களுமுண்டு.
ஆனால், 1908 பின் சொன்னவர்கள் பாடல்களே எளிய மக்களின் நாவிலே
அதிகமாக  நடம்  புரிந்தன.  அத்தகைய கவிஞர்களிலே மதுரை  பாஸ்கர
தாஸ்   ஒருவராவார்.   அவர்   எழுதிய   தமிழ்ப்பாடல்கள்  மக்களால்
பாடப்பட்டன.   அந்நாளில்,  பிச்சைக்காரன்கூட,  தேசபக்தி   மணக்கும்
ஏகாதிபத்திய எதிர்ப்புப்பாடல்களைப் பாடியே பிச்சைகேட்டான்  என்றால்,
பாஸ்கர தாஸ் பாடல்களின் மகிமைக்குவேறு என்ன சான்று வேண்டும்.

     விடுதலை  உணர்வை வெறியாகவே  வளர்த்துக்கொண்ட தேசபக்தக்
கவிஞர்கள்  எழுதிய   பாடல்களிலே,  காந்தியடிகளைப்  பற்றியவைகளே
அதிகம்  எனலாம்.  ஆம்;  அவர்தானே  பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தின்
முதல்  எதிரி!  "காந்தியோ  பரம ஏழை சந்யாசி" என்ற  பாடலுக்குத்தான்
அந்நாளில் எவ்வளவு மதிப்பு! கலியாண வீடுகளுக்குக்கூட   அந்த "ஏழை
சந்யாசி"வந்துவிடுவார், நாதசுரம் வாசிப்போர் வாயிலாக!