போராட்ட காலத்திலே, அரசாங்கம் அமுல் நடத்திய அடக்குமுறை ஒவ்வொன்றையும் கண்டித்து எழுந்த பாடல்கள் எத்தனை எத்தனையோ! உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, ஆயிரமாயிரம் தேச பக்தர்களை, அணியணியாகச் சிறைகளிலே அடைத்தது அன்னிய அரசு, அவர்களெல்லாம், பாரத அன்னையின் கால்களிலே அன்னியன் மாட்டிய விலங்கையொடிக்கும் வீரர்களன்றோ! அதனால், தனக்கு விடுதலை தேடப் பாடுபட்ட வீரர்களுக்கு இரங்கி, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் சிறைவாயிலிலே பாரத அன்னை அழுவதாக ஒரு பாடல்! "சிறைவாயில் தன்னில் அழுதாள், பாரதமாதா" என்பது அப்பாடலின் தலைப்பு! பண்டித மோதிலால் நேருவை... பண்டித மோதிலால் நேரு இறந்தபோது எழுந்ததே ஒரு பாடல்! இந்தி பேசும் மோதிலால் இறந்ததற்காக நம் செந்தமிழ் அழுததை என் சொல்லி வருணிப்பது! தேசபக்தியும் தமிழ்பக்தியும் கைகோர்த்துக் கூத்தாடிய காலம் அது! தமிழுக்கு ஊறு நேர்ந்தால் தேசபக்தி அழும்; தேசத்திற்குக் கேடு நேர்ந்தால், தமிழ் பக்தி அழும்! அந்த நல்ல பண்பு திரும்பவும் வருமோ, வாராமலே போய்விடுமோ! தேசத்தலைவர் மோதிலால் மாண்டபோது, "பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே!" என்றொரு பாடல். "ஞானப் பண்டித மோதிலால் நமைப் பிரிந்தார்" என்று இன்னொரு பாடலும் ஒலித்தது. இந்தப் பாடல்கள் நாதசுரத்தோடு இரண்டறக் கலந்து விட்டனவோ என்று நினைக்கும்படியாக செல்வாக்குப் பெற்றன. சுவாமி ஊர்வலத்தின் முன்னேயும், கலியாண வீடுகளிலேயும், "பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே" தான்! ஆம்; அடிமைப்பட்ட மக்களுக்கு - அடிமைத் தளையறுக்கப் போராடும் வீரச்சாதிக்கு மங்கலமும் அமங்கலமும் ஒன்றுதானே! இது தெரியாமலா, “நாளுங்கிழமையும் நலிந்தோர்க்கில்லை" என்று பாடினர் சான்றோர்! வீரன் பகவத் சிங் தூக்கிலிடப்பட்டபோது துள்ளி எழுந்தது ஒரு பாடல்! அது, "பகதூர் பகவத் சிங்கம்; பக்திமான்கள் தங்கம்" என்பதாகும். இந்த வாசகத்திலே குறிப்பிடப்படும் 'பக்தி', தேசபக்தியைத் தவிரவேறில்லை. தேசபக்தர் நாவிலே அன்று 'பக்தி’ என்ற சொல் பிறந்தாலே, அது தேசபக்திதான்! விடுதலை வெறிபிடித்த வீரனுக்கு 'வீடு' பேறுகூட தேவையற்றதுதானே! |