பக்கம் எண் :

156விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

    இப்படி,   அணியணியாக   தேசபக்தக்  கவிஞர்கள்  எண்ணற்றோர்
தோன்றி,   கணக்கற்ற  தமிழ்ப்பாடல்களைப்  பாடி,  பாமரர்களிடையேயும்
தேசபக்தியை  -  தேசவிடுதலை  ஆவேசத்தை  வளர்த்தனர்.  இவ்வளவு
கவிஞர்கள்  பிறமொழி   மாநிலமெதிலும்  தோன்றியதாகச்  செய்தியில்லை.
தமிழ்மக்கள்  தேசியப்பாடல்களின்  புலமையைப்   பாராமல்  பொருளிலே
மயங்கினர்.   ஆம்;   விடுதலை  வெறி   பிடித்த  போர்  வீரர்களுக்குத்
தேவைப்படுவது  புலமையல்ல;  பொருள்தான்!  ஆனால், விடுதலைப்போர் 
முடிவுற்ற  பின்னர்,  இலக்கணப்  புலமையோடு கூடிய தேசியப் பாடல்கள்
ஏட்டிலே    நின்று,   இலக்கியக்   களஞ்சியத்தில்   சேர்ந்தன.  பள்ளிப்
பிள்ளைகளுக்குப்   பாடங்களாகவும்   போதிக்கப்படுகின்றன.  இலக்கணப்
புலமையற்ற பாடல்கள், காற்றோடு கலந்து அருவமாயின! ஆனால், தமிழின்
வரலாற்றுப்   பெருமைகளைக்  காப்பதற்காகவேனும் அந்தப் பழம்  பாடல்
களைத் தேடித் தொகுத்து,அந்தத் தொகுப்பிற்கு நூல் வடிவம் தரவேண்டும்.
புதுவை  ஆனந்தரங்கமபிள்ளையின்   இலக்கணப்   பிழைகள்   நிறைந்த  
'நாட்குறிப்பு' சரித்திர தஸ்தாவேஜு    ஆகிவிட்டதென்றால்,   இலக்கணப் பிழைகளோடு கூடிய தேசியப்     பாடல்களும்   சுதந்திரப்    போராட்ட
சரித்திரத்தின் தஸ்தாவேஜு களாகக் கருதப்படலாந்தானே!

கவிதை நடையிலே மாறுதல்!

     தேசியவாதிகள்  கவிதைத்   தமிழுக்குச்   செய்த   தலையாய பணி
என்னவென்றால்,  எளிய நடையில், பாமரரும் பொருளறிந்து ரசிக்கத் தக்க
முறையில் கவிதை அமையவேண்டும்  என்று  கட்சி பேசியதாகும். இதனை,
அந்நாளைய  தமிழ்ப்  புலவர்கள்   ஏற்கவில்லையென்றாலும்,  மக்களிடம்
தங்களுக்கிருந்த  எல்லையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி  தேசியவாதிகள்
வெற்றி பெற்றனர்.

      "எளிய பதங்கள்,  எளியநடை,  எளிதில் அறிந்து  கொள்ளக் கூடிய
சரிதம்,     பொதுஜனங்கள்    விரும்பும்   மெட்டு    இவற்றினையுடைய
காவியமொன்று  தற்காலத்திலே  செய்து  தருவோன் நமது தாய்மொழிக்குப்
புதிய  உயிர்  தருவோனாகின்றான்.  ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள
தமிழ்  மக்களெல்லோருக்கும்  நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன்,
காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்."1


1. "பாஞ்சாலி சபதம்' முன்னுரையில்